சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 14ம் தேதி அன்று நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எது? என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு மஹர், நாடார், ஈழவர், அரிஜன் என நான்கு விருப்பப் பதில்களையும் தந்துள்ளனர்.
சாதிக்கு எதிராகப் போராடிய தந்தை பெரியார் பெயரில் திகழும் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.
இந்த கேள்வி தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை தமிழக அரசு நியமித்து இருப்பதோடு அதன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
சர்ச்சை வினாத்தாள் வேறோரு பல்கலைக்கழக பேராசிரியர்களால் தயாரிப்பது என்றும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்த கேள்விக்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், கி.வீரமணி, திருநாவுக் கரசர், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆதி திராவிடர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து துணைவேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இது போன்ற கேள்வியை சாமான்யர்கள் எழுப்பினாலே கடும் எதிர்ப்பு கிளம்பும். அதுவும் அதில் ஒரு பல்கலைக்கழகமே ஈடுபடுவதை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது.
இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்; தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்த சாதிக் கேள்வியை கேட்ட பேராசிரியர் யார் என்பது இன்னும் வெளிவரவில்லை.
அவர் யாராக இருந்தாலும் முதலில் பல்கலைக்கழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சாதிச் சர்ச்சையை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இது போன்ற செயல்கள் இனி ஒருபோதும் எங்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்!



