fbpx
Homeதலையங்கம்என்ன சொல்லப்போகிறது தேர்தல் ஆணையம்?

என்ன சொல்லப்போகிறது தேர்தல் ஆணையம்?

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மா னங்கள் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி நியமிக்கப்பட்டது, ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது, கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது உள்ளிட்ட அனைத்து தகவல்கள் அடங்கிய ஆவணங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் இபிஎஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் வழங்கி இருக்கிறார்.

இதற்கு பதிலடியாக, ஓ.பன்னீர்செல்வமும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்டவிதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.

கட்சியின் உட்பிரிவுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டு வந்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். திருத்தங்களின் அடிப்படையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர்.

இந்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது’ என்று அதில் கூறி உள்ளார்.
அதிமுக பொதுக்குழு நடத்த கூடாது என்று ஓபிஎஸ் 2 முறை நீதிமன்றம் சென்றார். ஆனால், தீர்ப்பு எடப்பாடி அணிக்கே சாதகமாக இருந்தது.

தற்போது, ஓபிஎஸ் அணியினர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை தான் பெரிய அளவில் நம்பி உள்ளனர். அதன்மூலம் எடப்பாடி அணியினருக்கு முட்டுக்கட்டை போடவும் ஓபிஎஸ் தரப்பு காய் நகர்த்தி வருகிறது.

காரணம், இந்திய தேர்தல் ஆணையத்தில் இதுவரை உள்ள ஆவணங்களில் இரட்டை தலைமையின் கீழ் அதிமுக செயல்படும் என்ற ஆவணங்களே முக்கிய ஆதாரமாக உள்ளது.

அதனால் எடப்பாடி அணியினர், வழங்கியுள்ள புதிய ஆவணங்களை ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளது.

விரைவில் ஓபிஎஸ் தரப்பும் நேரில் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ள ஆவணங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார்கள்.

பொதுவாக, இதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் ஆராயப்படும்.
மேலும் இரண்டு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து வருகிறது. என்ன விளக்கங்கள் கோர வேண்டும்,

பதில் அளிக்க எத்தனை நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு விதிகள் தொடர்பான அம்சங்களை பரிசீலனை செய்து வருகிறார்கள்.

நோட்டீஸ் அளிக்கப்பட்டு, இரண்டு தரப்புகளும் அவரவர் நோட்டீசுக்கு பதில் அளித்த பிறகு, தேர்தல் ஆணையம் ஒரு இறுதி முடிவை அறிவிக்கும். ஆனால் இதற்கு எந்த காலக்கெடுவும் விதிக்க முடியாது.

எனவே, தேர்தல் ஆணையத்தின் முடிவு எப்போது வெளியாகும் என்று இரண்டு தரப்புகளும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் என்ன சொல்லப் போகிறதோ தெரியவில்லை. நாமும் காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img