fbpx
Homeதலையங்கம்நிறைவடைந்த ஓராண்டு திமுக அரசின் சாதனைகள்!

நிறைவடைந்த ஓராண்டு திமுக அரசின் சாதனைகள்!

கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மே 7ம் தேதி ஆட்சியமைத்தது திமுக. ஓராண்டினை நிறைவுசெய்யும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மக்களை மிகவும் திருப்தியடையச் செய்துள்ளது.

தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சியில் இருந்த அதிமுக, மத்தியில் முழு பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக என இருகட்சி கூட்டணியையும் வீழ்த்தி தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து ஓராண்டினை நிறைவுசெய்துள்ள திமுக அரசை மக்கள் வாயார பாராட்டுகின்றனர்.

ஆட்சி தொடங்கியவுடனே அச்சுறுத்திய கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், திறமையான அதிகாரிகளை தனது அரசின் முதல்வரிசையில் நிற்கவைத்தும் நல்லாட்சியை மலரச் செய்தார்.

திமுக வெற்றியின் அச்சாணியாக பார்க்கப்படுவது அதன் தேர்தல் அறிக்கைதான். எனவே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கிய இலக்கு என்பதனை ஆட்சி பொறுப்பேற்றபோதே ஆணித்தரமாக சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.

கொரோனா நிவாரணம் 4 ஆயிரம், மகளிர் பேருந்து பயணம் இலவசம், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு, மக்களைத்தேடி மருத்துவம் என முதற்கட்டமாக பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது.

பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கிராமப்புற சாலைகள் அமைத்தல், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இலவச பேருந்து பயணம் என்பன போன்ற திட்டங்கள் மிகச்சிறப்பானவை. இவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

திமுக அரசின் முதல் மூன்று மாதங்கள் கொரோனா பாதிப்புகளை சரிசெய்வதிலேயே கழிந்தது, அடுத்ததாக இரண்டு மாதங்கள் மழை, வெள்ள பாதிப்புகளை சீர் செய்வதில் சென்றது.

இப்படி இந்த ஐந்து மாத காலத்தை தவிர்த்த மீதமுள்ள மாதங்களில்தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு அரசின் முக்கியமான சவாலாக உள்ளது என்னவென்றால், மத்திய அரசிடம் இருந்து பங்குத்தொகை, நிதியுதவி எதுவும் சரிவர கிடைப்பதில்லை என்பதே. ஆனால் இந்த கடுமையான சூழலிலும் அரசு சவால்களை எதிர்கொண்டு இயன்றவரை சிறப்பாக பணியாற்றுகிறது என்றே சொல்லவேண்டும்.

ஓராண்டுகால திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என்பது மாநில உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக தயக்கமின்றி மத்திய அரசை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் போராட்டம்தான். மத்திய அரசின் மாநிலங்களுக்கு எதிரான போக்குகளை கண்டிக்கும் நாட்டின் முதல் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.

குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இன்னும் வழங்கவில்லை உள்ளிட்ட சிற்சில குறைபாடுகளை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.

அதுவும் விரைவில் நிறைவேறும்.
ஆக, மொத்தத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு சாதனைகள் மனநிறைவைத் தருகிறது.
தமிழக அரசின் சாதனைகள் தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img