Homeதலையங்கம்நீட் - கியூட் தேர்வுகளை ரத்து செய்து விடுங்கள்!

நீட் – கியூட் தேர்வுகளை ரத்து செய்து விடுங்கள்!

‘2022–23 கல்வியாண்டில் பல்கலைக் கழக மானிய குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளுக்கு சேர்க்கை நடத்துவதற்காக மத்திய அரசு நுழைவுத் தேர்வு நடத்துகிறது.

ஏற்கனவே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நுழைவுத்தேர்வை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மத்திய அரசின் பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கை இதனை நிரூபணம் செய்கிறது.

நீட் தேர்வை போல் பொதுப்பல்கலைக்கழக நுழைவு தேர்வு நாடு முழுவதும் பள்ளிக்கல்வி முறைகளை ஓரங்கட்டிவிட்டு, மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பள்ளிகளின் மேம்பாடு சார்ந்த கட்டமைப்புகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.

ஒன்றிய அரசின் இந்த முடிவால், மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களை மாணவர்கள் நாடும் சூழல் உருவாகும். மத்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கையை வெகுவாக குறைத்துவிடும்.

ஒன்றிய அரசின் இந்தப்போக்கை மற்றொரு விரும்பத்தகாத நடவடிக்கையாகவே கல்வியாளர்கள் கருதுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சமூகநீதி என்ற வார்த்தையே இடம்பெறவில்லை.

விட்டால் தொடக்கக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகம் வரை மத்திய அரசு நுழைவுத் தேர்வை கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

எனவே மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும், பொது நுழைவு தேர்வான கியூட் தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அல்லது தமிழகத்துக்கு அவற்றில் இருந்து விலக்கு தந்திட வேண்டும்.

தமிழக மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுக்கு மத்திய அரசே இடையூறாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

படிக்க வேண்டும்

spot_img