தமிழக சட்டப்பேரவையில் 2021, செப்டம்பர் 13ம் தேதி இளங்கலை மருத்துவப்படிப்புகளில் நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரைகளின் அடிப்படையில் தான் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக இந்த மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி இழுத்தடித்தார்.
6 மாதகால தாமதத்துக்கு பின்னர், நீட் தேர்வு விலக்க மசோதாவை தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார்.
அதற்குக் காரணமாக, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் இந்த மசோதா ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் தெரிவித்து இருக்கிறார். நீதியரசர் ஏ.கே.ராஜனின் பரிந்துரைகள் ஏற்கத்தக்கது அல்ல என்றும் கூறி இருக்கிறார்.
இது தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளன.
ஆளுநர் தெரிவித்த கருத்துக்களை ஆராய்ந்து நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, இந்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க நாளை (பிப்.5) அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.
மாநில அரசு மீண்டும் இதே மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதை அவர் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழி கிடையாது.
இது ஒருபுறமிருக்க, சமீப காலமாக நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் நடுவே இருந்து வந்த உரசல், தற்போதைய நிகழ்வு மூலம் விரிசலாக உருவெடுத்திருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பாக உள்ளது.
அடுத்த கட்டமாக தமிழக அரசு என்னவிதமான நடவடிக்கை எடுத்து சாதகமான சூழலை உருவாக்கப்போகிறது என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அனைத்துக் கட்சிகளின் கூட்ட முடிவைப் பொறுத்து அறிவிப்புகள் வெளியாகும்.
மக்கள் நலன் கருதி நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தை மு.க.ஸ்டாலின் கையிலெடுத்து இருக்கிறார். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதில் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சியினர் அசைக்க முடியாத கருத்தொற்றுமை கொண்டுள்ளனர்.
இந்த உணர்வை புரிந்து கொண்டால் உரசலும் விரிசலும் இல்லாமல் போகும். நல்ல தீர்வும் கிடைக்கும்.
நடக்குமா இது?



