fbpx
Homeபிற செய்திகள்கல்விப் பணியில் 53 ஆண்டு பணிபுரிந்த பேராசிரியருக்கு பிரிவுபச்சார விழா

கல்விப் பணியில் 53 ஆண்டு பணிபுரிந்த பேராசிரியருக்கு பிரிவுபச்சார விழா

கோவை நேரு கல்வி குழுமம் சார்பில், இக்கல்வி குழுமத்தில் கடந்த 17 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி பணி நிறைவு செய்யும் பேராசிரியர் முனைவர் பி. முத்துசாமிக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை நேரு கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியும் செயலாளருமான முனைவர் பி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
கல்லூரி நிறுவனர் பி.கே. தாஸ் நிர்வாக காலத்தில் சேர்ந்து இன்று வரை மிக சிறப்பாக கல்வி பணியை செய்து வருகிறார் பேராசிரியர் பி. முத்துசாமி.

நேரு காலேஜ் ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ் கல்லூரியின் வணிக மேலாண்மை துறையின் தலைவராக உள்ளார். இவரிடம் பயின்ற மாணவர்களில் நானும் ஒருவன்.

இவர் தனது 53 வருட கல்வி பணியில், 20 வருடம் கோவை அரசு கலைக் கல்லூரியிலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளும், நேரு கல்வி குழுமத்தில் 17 ஆண்டுகளும் வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்வி நிறுவனத்தில் 7 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2 வருடம் பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் பணியாற்றிய 53 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆசிரியரும் நினைவு கூரத்தக்க நாள் இது. ஒரு ரோல்மாடலாகக் கருதப்படவேண்டிய கல்வியாளர்.

இது விடைபெறுதல் நிகழ்வு அல்ல. பெருமையின் தொடர்ச்சிக்கான நிகழ்ச்சியாகும் என்றார். நேரு விமானவியல் கல்லூரி டீன் முனைவர் பாலாஜி பேசியதாவது: இவரது மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனையாளர்களாக உள்ளார்கள்.

இனி குடும்பத்துடன் ஓய்வு வாழ்க்கையை மகிழ்ச்சியாக நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறோம் என்றார். சிறப்பு விருந்தினர், பி.முத்துசாமியின் மாணவரும், மில்டெக்ஸ் மற்றும் ஸ்பேரோ சைக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான முனைவர் மணிகண்டன் பேசியதாவது:

ஒரு போதும் தனது கேபின் கதவை ஆசிரியர் மூடிவைத்ததே இல்லை. எந்நேரமும் அவரைத் தொடர்பு கொள்ளாலாம். ஆசிரியர்கள் போதிப்பவர்கள் மட்டுமல்ல. நம் திறன்களுக்கு எந்நேரமும் தொடர்புறுத்திக் கொண்டிருப்பவர்கள் என்றார்.

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img