fbpx
Homeதலையங்கம்சமூக நீதிப் புயல்!

சமூக நீதிப் புயல்!

சமூக நீதி, இந்த வார்த்தை கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவு தமிழ்நாடு அரசியலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு சொல்.

சமூக நீதிக்கான வரலாறு என்பது இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல, 1917 இல் சென்னை மாகாணத்தில் நீதி கட்சியில் தொடங்கி பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என தொடர்ந்து இன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்கிறது.

சமூக நீதியை காத்திடும் விதமாக கடந்த அரை நூற்றாண்டுகளாக இரு பெரும் திராவிட கட்சிகள் எடுத்த நடவடிக்கைகள் ஏராளம், அதிலும், குறிப்பாக திமுக-வின் பங்கு மிக முக்கியமானது.

இதன் தொடர்ச்சி தான், தற்போது ஒன்றிய அரசு, மருத்துவ படிப்புகளில், அகில இந்திய இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர்க்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அறிவித்திருப்பது.

கடந்த சில வருடங்களாக மருத்துவக்கல்லூரி களில் அகில இந்திய தொகுப்பின் கீழ் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப் படவில்லை.

இதனை தொடர்ந்து, திமுக கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. அந்த வழக்கில், 27 ஜூலை 2020-ல் சென்னை உயர்நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோர்க்கான இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்த வேண்டுமென்று ஆணையிட்டது.

ஆனாலும் இதை நடைமுறைப் படுத்துவதில் தாமதமானதால், மீண்டும் திமுக இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 19 ல் ஒரு மனுவை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது.

இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அரசு, மாநிலங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கும் 15% மருத்துவ படிப்பிற்கான இளங்கலை இடங்களிலும் மற்றும் 50% முதுகலை இடங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் 26-ம் நாள், குடியரசு நாளன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இடஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட “அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு” தொடங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

தன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சிகளின் 37 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின் இக்கூட்டமைப்பில் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இப்படி கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக சமூக நீதியை நிலைநாட்ட மக்கள் போராட் டம் மற்றும் சட்ட போராட்டங்களின் மூலம் வெற்றி வாகை சூடியுள்ளது திமுக. அதன் தொடர்ச்சியான மு.க ஸ்டாலினும், முழுமையான சமூக நீதியை நிலை நாட்டிட தன் பங்களிப்பை செய்து வருகிறார்.

அகில இந்திய அளவில் மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.
அன்று திருவாரூரில் தொடங்கிய சமூகநீதிப் புயல் இன்றும் – திருவாரூர் மண்ணின் மைந் தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முன்னெ டுக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை, ஒன்றிய அரசும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சட்டரீதி யாக வழங்கப் புயலாகக் கிளம்பி இருக்கிறார், மு.க.ஸ்டாலின்.

வெற்றி கிட்டாமலா போகும்?

படிக்க வேண்டும்

spot_img