fbpx
Homeதலையங்கம்பெண்கள் வாழ்வில் விடியல் ஏற்படுத்தும் புரட்சித் திட்டம்!

பெண்கள் வாழ்வில் விடியல் ஏற்படுத்தும் புரட்சித் திட்டம்!

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கும் நிலையில், அதை 21 ஆக உயர்த்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

முன்னதாக இதுபற்றி ஆராய, சென்ற வருடம் ஜூன் மாதத்தில், ஜெயா ஜெட்லி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. பெண், தாயாக சரியான வயது என்ன என்பதை கண்டறிவதே இந்த குழுவின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இதன் அறிக்கையை மத்திய அரசுக்கு நிதி ஆயோக் அனுப்பி வைத்து, பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்கலாம் என பரிந்துரை செய்தது.

இதன் மூலம் தாய்-சேய் சத்துக்குறைபாடு மற்றும் மகப்பேறு காலத்தில் தாய்-சேய் உயிரிழப்புகளை தடுக்கலாம். பெண்கள் முன்பைவிட அதிக எண்ணிக்கையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தற்போது பங்கேற்பதால், இந்த மாற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

இதன் மூலம் பெண்களின் ஆரோக்கியம் மட்டும் அல்லாது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்று அந்த பரிந்துரையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

1978ஆம் ஆண்டு வரை பெண்களின் திருமண வயது 15 ஆக இருந்தது. அதை அதிகரிக்க வேண்டும் என அந்த சமயத்தில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து, பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆண்களின் திருமண வயது 21ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பெண்ணுக்கு 18 வயது ஆனதுமே மாப்பிள்ளை பார்த்து திருமணம செய்து வைக்க ஏராளமான பெற்றோர்கள் தயாராகி விடுகிறார்கள். அவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அதேபோல 18 வயது ஆனதும் தனக்கு எல்லா உரிமையும் வந்து விட்டதாக கருதும் வளர்இளம் பெண்களின் மனமும் பக்குவப்பட வேண்டும்.

சட்டத்தால் மட்டும் இதனை மாற்றிவிட முடியாது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இது தொடர்பான சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

ஏனெனில் பெண்ணின் திருமண வயது 18 ஆக இருக்கும்போதே பரவலாக குழந்தை திருமணங்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் நடப்பதாக வரும் செய்திகளை அடிக்கடி பார்க்கிறோம்.

பிரசவத்துக்காக மருத்துவம னைக்கு வரும்போது வயது குறைவாக இருப்பது தெரிந்து, போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தவிர்க்க முடியாததாக மாறி குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

மத்திய அரசின் புதிய சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் 18 முதல் 21 வயதுக்குள் திரும ணமான பெண்களின் கதி என்னாகும்? ‘லிவிங் டுகெதர்’ பார்ட்னர்கள் மீது பலாத்கார வழக்கு பாயுமா? என்ற கேள்விகளும் எழாமல் இருக்காது. இதற்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.

ஆனாலும், பெண்களின் திருமண வயது 21 ஆக உயரப்போவது வரவேற்கத்தக்கது மட்டுமல்ல மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. இது ஒரு புரட்சிகரமான திட்டம் ஆகும்.

பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், பிரகாசமான எதிர்காலத்திற்கும் இது பெரிதும் உதவும். பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துவது திண்ணம்!

படிக்க வேண்டும்

spot_img