fbpx
Homeதலையங்கம்கருணை காட்டுமா மத்திய அரசு?

கருணை காட்டுமா மத்திய அரசு?

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. முதல் மழையிலேயே சென்னை வெள்ளத்தில் மிதந்தது.

தொடர்ந்து பெய்த மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்தன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளே புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.


தஞ்சை, திருவாரூர், நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பல்லாயிரம் ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாயின.

பயிர்சேதத்துக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்த நிலையில் மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு தமிழகம் வந்து தமிழகத்தில் பரவலாக பயணம் மேற்கொண்டு மழை, வெள்ள சேதத்தை கணக்கிட்டது.

இந்த குழுவிடம் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க ரூ.4625 கோடி தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


மத்திய அரசிடம் குழு தனது அறிக்கையை அளித்த பின்னர், குழுவின் பரிந்துரையை ஏற்ற தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு மூலம் வழங்கப்படும்.


ஆனால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேட்கும் நிவாரண நிதியை எந்த காலத்திலும் அது கேட்ட அளவில் பாதியளவு கூட கொடுக்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம்.
உதாரணத்துக்கு 2018 கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு கேட்டது நிவாரண நிதி ரூ.14,910 கோடி.


ஆனால் மத்திய அரசு தந்ததோ வெறும் ரூ.1499 கோடி தான். இதுதான் காலங்காலமாக நடந்து வருகிறது.


ஆனால் தற்போது தமிழகம் மழை, வெள்ளத்தால் தொடர் பாதிப்பை சந்தித்து வருகிறது. இன்னும் மழை ஓயவில்லை.


அவ்வப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.


அதனால் அடுத்த கட்டமாக மேலும் கூடுதல் நிதியை மத்திய அரசிடம் கேட்போம் என தமிழக அரசு கூறி உள்ளது.


சமீப மழை வெள்ளத்தால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் சீர்குலைந்து கிடக்கின்றன. பயிர்கள் நாசமாகி விவசாயிகள் கண் கலங்கி நிற்கின்றனர்.


தமிழகத்துக்கு பெரும் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தால் தான், மறுசீரமைப்பு பணிகளை செம்மையாக செய்ய முடியும்.


வழக்கமாக மத்திய குழு, வெள்ளம் வடிந்த பின்பே வந்து பார்த்து செல்லும். ஆனால் இம்முறை மழைச்சேதங்களை மத்தியக்குழு கண் கூடாக பார்த்து சென்றுள்ளது.


எனவே வழக்கமான நடைமுறையை மாற்றி, தமிழக அரசு எதிர்பார்க்கும் அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும்.

ஒதுக்கும் என்றே தமிழக அரசும், தமிழக மக்களும் எதிர்ப்பார்க்கிறார்கள். காத்திருப்போம்.

படிக்க வேண்டும்

spot_img