மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் இருந்து போர்க்குரல் கிளம்பியது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பல வழக்குகளுக்கு 27.7.2020 அன்று அகில இந்திய தொகுப்புக்கு அளிக்கப்படும் மருத்துவ கல்லூரி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமை இருக்கிறது என்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.
மு.க.ஸ்டாலினும், திமுகவும், எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவும், திராவிடக்கழக தலைவர் வீரமணியும் எடுத்த கடுமையான முயற்சிகளாலும், திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பாலும் கிடைத்த பலனால் இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதமும் வழங்கும் முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் இளநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட 1500 மாணவர்களும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்களில் 550 மாணவர்களும், முதுநிலை மருத்துவ படிப்பில் 2500 இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 1000 பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு மாணவர்களும் என 5550 மாணவர்கள் பலனடைவார்கள்.
27 சதவீத ஒதுக்கீடு கிடைத்தது நிச்சயமாக மகிழ்ச்சிக்குரியது என்றாலும், தமிழ்நாட்டை பொருத்தமட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் பிற்படுத்தப்பட்டோர், மக்கள் எவ்வளவு சதவீதம்? என்பது தெரியாவிட்டாலும், தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் 71 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு வழங்கும் 50 சதவீத இடத்தையாவது மத்திய அரசாங்கம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டும் என்பது தான் பொதுவான கோரிக்கையாக தற்போது இருக்கிறது.



