எட்டாம் வகுப்பு வரையிலான மாண வர்களுக்கு பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பு பொதுமுடக்க நீட்டிப்பு அறிவிப்பின்போது தெரிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், நிகழாண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் சமூக பொருளாதார நிலையில் பின் தங்கிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நவீன அறிவியல், விஞ்ஞானம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சியை ஏற்படுத்தும் ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சியை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளி களில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்து அறிவியல் பயிற்சி வழங்க உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டத்தை மாவட்டந்தோறும் கொண்டு செல்ல நடவ டிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தொற்றைக் காட்டிலும் கற்றல் குறைபாடே மிகப்பெரிய தொற்றாக இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. அனைத்துத் தரப்பினரின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவு எடுப்பார்.
பொதுமுடக்கம் நீட்டிப்பு தொடர்பான அரசின் அறிவிப்பு வெளியாகும் போது, பள் ளிகள் திறப்பு பற்றிய அறிவிப்பும் அதில் இடம் பெறும். மாணவர்கள் கட்டாயமாக பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



