திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள 7797 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.641.87 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் கூறியதாவது:
டாக்டர் கலைஞர் தமிழகத்தில் முதன்முதலாக தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 1989-ம் ஆண்டு, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும், சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார்.
இந்தக்குழு மூலம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதியிலுள்ள 10-20 பெண்களுடன் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு சுழல்நிதி கடன், பொருளாதார கடன், வங்கிக் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இது தமிழ்நாடு அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தும் திட்டம் ஆகும்.
திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊரகப்பகுதிகளில் கண்டறியப் பட்ட பெண்களை சுய உதவிக் குழுக்களாக அமைத்து, அடிப்படை பயிற்சிகள் வழங்கி, சுழல் நிதி மற்றும் கடன் இணைப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நிலைத்த தன்மை அடையச் செய்து வறுமையிலிருந்து விடுவிப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.
இப்பணிகள் அனைத்தும் இலக்கு மக்களைக் கொண்டு 265 கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட 265 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2021-2022-ம் ஆண்டில் கிராமப்புறங்களில் 426 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களும், 2022-2023-ம் ஆண்டில் கிராமப்புறங்களில் 144 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 570 சுயஉதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுழல் நிதியாக சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்டில் 209 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15,000 வீதம் மொத்தம் ரூ.31.35 இலட்சம் சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.619.40 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி
சமுதாய முதலீட்டு நிதியாக கடந்த 2021-2022-ம் ஆண்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம், தொழில் செய்யும் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உறுப்பினர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு 222 ஊராட்சிகளில் 706 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.619.40 இலட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் இணைப்பாக 2021-2022-ம் ஆண்டில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 10,432 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.530.55 கோடியும், 2022-&2023-ம் ஆண்டில் 768 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.28.81 கோடியும் என மொத்தம் 11,200 சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.559.36 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெருங்கடனாக 2021-2022-ம் ஆண்டில் 9 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு களுக்கு ரூ.1.39 கோடியும், 2022-2023-ம் ஆண்டில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.21.30 இலட்சமும் என மொத்தம் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
திறன் பயிற்சி மூலம் 2021-2022-ம் ஆண்டில் 175 இளைஞர்களுக்கும், 2022-2023-ம் ஆண்டில் 63 இளைஞர்களுக்கும் என மொத்தம் 238 இளைஞர்களுக்கு தையல் இயந்திரம் இயக்குபவர், பேஷன் டிசைனர் மற்றும் மெர்ச்சன்டைசர் போன்ற வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கி, பல்வேறு நிறுவனங்கள் மூலம் வேலை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் தின் மூலம் கடந்த 2021-2022-ம் ஆண்டில் நகர்ப்புறங்களில் 427 சுய உதவிக்குழுக்களும், 2022-2023-ம் ஆண்டில் 196 புதிய சுய உதவிக் குழுக்களும் என மொத்தம் 623 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிநபர் தொழில் கடனாக 2021-2022- ம் ஆண்டில் 240 தனிநபருக்கு ரூ.134.84 இலட்சம் வங்கிக்கடனும், 2022-2023-ம் ஆண்டில் 29 தனி நபர்களுக்கு தொழில் தொடங்க ரூ.14.05 இலட்சமும் என மொத்தம் 269 தனிநபர்களுக்கு ரூ.148.89 இலட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க வங்கிக்கடன் பெற்று தரப்பட்டுள்ளது.
நேரடி கடனாக கடந்த 2021-2022-ம் ஆண்டில் 621 சுய உதவிக் குழுக்களுக்கு நேரடிக்கடனாக ரூ.2099.54 இலட்சமும், 2022-2023-ம் ஆண்டில் 117 சுய உதவிக்குழுக்களுக்கு நேரடிக் கடனாக ரூ.493.92 இலட்சமும் என மொத்தம் 738 சுய உதவிக்
குழுக்களுக்கு ரூ.25.93 கோடி மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளது.
சிறு தொழில் கடனாக 2021-2022-ம் ஆண்டில் 188 சிறு குழுக்களுக்கு ரூ.457.61 இலட்சமும், 2022-2023-ம் ஆண் டில் 18 குழுக்களுக்கு ரூ.46.18 இலட்சமும் என மொத்தம் 206 சிறு குழுக் களுக்கு ரூ.503.79 இலட்சம் மதிப்பீட்டில் கடன் வழங்கப் பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எஸ்.வினீத்.
“மீளாத் துயரத்தில் இருந்து மீண்டோம்”
வாரணம் மகளிர் சுயஉதவிக்குழுவைச் சேர்ந்த சபிதா தெரிவித்ததாவது:
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். ஏழ்மை நிலையிலுள்ள 10 பெண்கள் சேர்ந்து மகளிர் சுயஉதவிக்குழுவை அமைத்து, வாரணம் மகளிர் சுய உதவிக்குழு என பெயரிட்டோம்.
இக்குழுவின் மூலம் சுயதொழில் தொடங்க வங்கிக் கடனாக ரூ.4.50 இலட்சம் கடந்த மாதம் பெற்றோம். அதை மூலதனமாகக் கொண்டு சுயதொழில் தொடங்கினோம். சேலை வியாபாரம் செய்கிறேன். இதன்மூலம் மாதம் ரூ.20,000 வருமானம் கிடைக்கிறது.
மாதத்தவணையாக ரூ.3,000 வங்கிக்கு செலுத்தி வருகிறேன். சுயதொழில் மூலம் பெறக் கூடிய வருமானத்தில் எங்கள் குழுவின் சார்பாக ரூ.15,300யை மாதத்தவணையாக வங்கியில் செலுத்தி வருகிறோம்.
கிடைக்கக் கூடிய வருமானத்தைக் கொண்டு பெற்ற கடனையும் சுலபமாக திருப்பி செலுத்த முடிகிறது. மாதத்தவணை செலுத்தியது போக மீதமுள்ள தொகையில் எங்களுடைய பொருளாதாரம் மேம்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வெளிநபர்களிடம் வட்டிக்கு பணம் பெற்று செலுத்த முடியாமல் மீளா துயரத்தில் இருந்து வந்தேன். தற்போது சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் கிடைப்பதால், சுய தொழிலும், வாழ்க்கையும் மன நிறைவுடன் உள்ளது. சுய தொழில் கடன் வழங்கிய முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
“பொருளாதாரம் மேம்பட்டது
வேதனைகள் தீர்ந்தன”
நொய்யல் நதிகள் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த லதா தெரிவித்ததாவது:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் வசித்து வருகிறேன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததால், பொருளாதார ரீதியான முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சுயஉதவிக்குழுக்களை பற்றித் தெரிந்து, சுய தொழில் செய்ய விருப்பமுள்ள 10 பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் சுயஉதவிக்குழுவை ஆரம்பித்தோம்.
சுயஉதவிக்குழுவின் மூலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வங்கிக்கடனாக ரூ.10 இலட்சத்தை பெற்றோம். தையல் இயந்திரம் வாங்கி துணி தைக்கிறேன்.
இதன் மூலம் சுமார் ரூ.15,000 வருமானம் வருகிறது. மாதத் தவணையாக ரூ.3,500 செலுத்தி வருகிறேன். சுய தொழில் வருமானத்தைக் கொண்டு குழுவின் சார்பாக மாதத்தவணையாக ரூ.35,000 வங்கியில் செலுத்தி வருகிறோம்.
குழந்தைகளுக்கு தேவையான கல்வியை எளிதாக பெறமுடிகிறது. கடந்த காலத்தில் பொருளாதாரத்தினால் பட்ட வேதனைகள் அனைத்தும் தீர்ந்து விட்டது. பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முதல்வரின் ஆட்சி என்றென்றும் தொடர வேண்டும் என்றார்.
வெளியீடு
செ.கு.சதீஸ்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
திருப்பூர் மாவட்டம்.



