கடந்த 2010ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அறிக்கை வெளியிட்டார். இதை மேற்கோள்காட்டி நாட்டின் பல்வேறு ஊடகங்களும் ரூ.1.76 லட்சம் கோடி மோசடி என்று அடிப்படை கூட தெரியாமல் செய்தி வெளியிட்டன.
இதைத் தொடர்ந்து அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த போதிலும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எந்த வருவாய் இழப்பும் ஏற்பட்டதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து 2ஜி விவகாரத்தில் பொய்யான தகவல் கூறியதற்கு முன்னாள் ஒன்றிய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.இதன் மூலம் சிலர் திட்டமிட்டு திமுக மேல் அவதூறு பரப்பியது வெளிப்படையாக தெரியவந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் ஒன்றிய அரசு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது. இந்த ஏலம் இரு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில், 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மட்டுமே ஏலம் சென்றது. சுமார் 5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் போகும் என அரசு எதிர்பார்த்த நிலையில், வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கே ஏலம் சென்றுள்ளது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், 14 ஆண்டுகளுக்கு முன்னர் அதுவும் 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்பதை ஊழல் என்று வர்ணித்த ஊடகங்களில் ஏன் தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகவும் குறைவான தொகைக்கு சென்றதை ஊழல் என்று கூறவில்லை என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து திமுக இணைய பிரிவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் என்றார் சி.ஏ.ஜி.யின் வினோத் ராய். 2022இல் பாஜக ஆட்சியில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அம்பானி, அதானி, மிட்டல் கூட்டாளிகள் எடுத்த ஏலத்தில் கிடைத்திருப்பதோ வெறும் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மட்டுமே.
அப்படியென்றால் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழலா? அப்போது திமுக மேல் பொய்ப்பழி போட்ட பாஜக இப்போது பதில் சொல்லுமா?” என கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் நியாயம் இல்லாமல் இல்லை.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா இது தொடர்பாக கூறியதாவது: 2ஜி-யை விட 5ஜி 20 மடங்கு அதிக திறன் வாய்ந்தது. 2ஜி-யில் வெறும் குரல்தான் சென்றது.
3ஜி-யில் வீடியோ வந்தது. இப்போது 5ஜி-யில் எந்த ஒரு இணைய தேடுதலாக இருந்தாலும் ஒரு நொடியில் வந்துவிடும்.
இந்த திறன் அடிப்படையில் பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.6 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை.அப்படியானால் திட்டமிடுதலில் மோசமா? நாலைந்து கம்பெனிகளோடு சேர்ந்து மத்திய அரசு கூட்டு சதி செய்ததா?. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இது ஒரு மிகப்பெரிய மோசடி.இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.
கூட்டிக்கழித்து பார்த்தால் எங்கோ இடிக்கத் தான் செய்கிறது. இதனைத் தெளிவுப்படுத்த வேண்டிய கடமை ஒன்றிய பாஜக அரசுக்குத் தான் உள்ளது.
சரியான விளக்கத்துக்காக நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள். விசாரணை நடத்துமா ஒன்றிய அரசு?



