தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜூ முன்னிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலில், அத்திருகோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாட்டில் இல்லாத 28 கிலோ 906 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொள்ளாச்சி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பொள்ளாச்சி, பெடரல் வங்கியின் சார்பில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்பிலான மின்கல ஊர்தியினை திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இப்பணிகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ரூ,5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அது கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், பொள்ளாச்சி சார் ஆட்சியர் ஏ.கேத்ரின் சரண்யா, இணை ஆணையர்கள் இரா. வான்மதி. பி,இரமேஷ், துணை ஆணையர் விஜயலட்சுமி, உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் முரளி கிருஷ்ணா மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர்/உதவி ஆணையர் இந்திரா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.