2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்த லுக்கு தேசிய அளவி லும், மாநிலங்கள் அளவிலும் அரசியல் கட்சிகள் தற்போதில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்ப்பதா அல்லது மூன்றாவது அணி அமைப்பதா என பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
மூன்றாவது அணி அமைப்பது வேஸ்ட்… பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உடன்தான் கரம் கோர்க்க வேண்டும் என்று சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கருதுகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி 40 தொகுதிகளும் நமதே என பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளது. பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இப்போதே இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் எம்.பி., தேர்தலுக்கு ஆயத்தமாகி வர, பாஜகவும் 2024 தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது.
காங்கிரஸுக்கு தற்போது மக்களவையில் வெறும் 50 க்கும் குறைவான எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். வரும் தேர்தலில் இந்த இடங்கள் கூட காங்கிரஸுக்கு கிடைக்காத அளவுக்கு மகத்தான ஹாட்ரிக் வெற்றியை பெற லேண்டுமென பாஜக கருதுகிறது.
என்னதான் மோடி இமேஜ் இருந்தாலும், இரண்டு முறை தொடர்ந்து ஆட்சிபுரிந்து வருவதால் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி வாக்காளர்கள் மத்தியில் இருக்கதான் செய்யும் என்ற யதார்த்தத்தை பாஜக மேலிட தலைவர்கள் உணர்ந்துதான் உள்ளனர்.
அதனால் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை பெற, தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், அதாவது 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயிலை திறந்து வாக்குகளைத் திரட்ட பாஜக திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அடுத்து, ஜம்மு -காஷ்மீரை மையமாக வைத்து பல ஆண்டுகளாக பெரும் தலைவலியாக இருந்துவரும் இந்தியா- & பாகிஸ்தான் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் ராணுவ நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அது தேர்தலில் வடமாநில வாக்காளர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்பது பாஜகவின் திட்டம்.
காங்கிரசும் மெகா கூட்டணி அமைத்து பாஜகவை வீழ்த்த வியூகம் வகுக்கும். ராகுல்காந்தியின் பாதயாத்திரை 2024 தேர்தலில் பெரும் மாற்றத்தை உருவாக்கித் தரும் என்பது காங்கிரசின் அசைக்க முடியாத நம்பிக்கை.
2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வாக்காளர்களும் தங்கள் மனக் கணக்கை இப்போதே போட ஆரம்பித்து விட்டனர்!