டெல்லியில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி துவங்கப்பட்ட போராட்டம் வேறு சில நிபந்தனைகளுடன் ஓராண்டை கடந்து இன்னும் தொடர்கிறது. பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிப்படி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது வரவேற்கத்தக்கது என்றாலும், நிறைவேற்றப்பட்ட முறை தான் ஜனநாயகத்துக்கு விரோதமாக-நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிராக அமைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
ரத்து மசோதா மீது நாடாளுமன்றத்தில் தற்போதும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதும், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய எதிர்ப்புக் குரல் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிட்டது. இது மட்டுமல்ல பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்திலும், விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
இதனால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. அந்த காலக் கட்டத்தில் புதிய மசோதாக்களை பாஜக அரசு விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றிக்கொண்டது.
முக்கியமான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முன் அதுகுறித்து விவாதிப்பது என்பது ஜனநாயக நடைமுறை.
அதனை உதாசீனப்படுத்திவிட்டு மசோதாக்களை நிறைவேற்றினால் அதற்கு நாடாளுமன்றம் தேவையில்லையே என்பது தான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அனுமதி மறுக்கலாம்.
ஆனால் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்படுவதை யாரால் தடுக்க முடியும்? 3 வேளாண் சட்டங்கள் ரத்தானதற்கு மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நடந்த விவாதமே முக்கிய காரணம் என்றால் யாரால் மறுக்க முடியும்? அது தானே உண்மை!



