fbpx
Homeதலையங்கம்வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

நாளை நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை நேற்றே முடிவடைந்து விட்டது. இறுதி கட்டப்பிரசாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி இருக்கிறார், இந்நாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.

அவரது பேச்சின் முக்கிய பகுதிகள்: 9 மாத ஆட்சிக்காலத்தில் அதிமுக பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை நாம் செய்திருக்கிறோம். ஆதாரபூர்வமாகத்தான் சொல்கிறேன். நமது சாதனைகளை எடப்பாடி பழனிசாமி தெருவில் இறங்கி மக்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

அதிமுக ஆட்சியில் சட்டம் & ஒழுங்கு எப்படி இருந்தது? பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி. அது மட்டுமா?

Êசாத்தான்குளம் காவல்நிலையத்தில் தந்தை & மகன் அடித்துக் கொலை… மறந்து விட்டீர்களா? நீதிமன்றமே கொலைக்கான முகாந்திரம் இருக் கிறது என்று சொன்னபிறகும் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று சொன்னீர்களே, அது ஞாபகம் இருக்கிறதா?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது யார்? அதற்கு என்ன காரணம்? ஒரு கொடூர கும்பலைக் காப்பாற்ற வெட்கமே படாமல் செயல்பட்டது தான் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சி.

தமிழகத்தன் தலைமை பீடமான தலைமைச் செயலகத்திலேயே வருமான வரிச்சோ தனை நடந்ததும் டிஜிபி வீட்டில் சோதனை நடந்த தும் அதிமுக ஆட்சியில் தானே.

5 பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணம்அடைந்த மர்மமான வழக்கு தான் கொட நாடு கொலை – கொள்ளை வழக்கு. பழனிசாமி அவர்களே, மக்கள் யாரும் இதனை மறக்கவில்லை.

அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று விசாரணை கமிஷன் அமைத்தீர்களே, அந்த ஆணையத்தை முடக்கினீர்களே, அந்தக் கதையையும் கொஞ்சம் ஞாபகப்படுத்தவா?

இப்படி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்தவற்றை பட்டியலிட்டு புள்ளிவிவரத்தோடு அடுக்கிய மு.க.ஸ்டாலின், தனது 9 மாத ஆட்சியில் செய்த சாதனைகளையும் ஆதாரத்தோடு பட்டியல் போட்டு பிரசாரம் செய்தார்.

கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மீனவர்களுக்கு உதவித்தொகை உயர்வு, 13 லட்சம் பேரின் நகைக்கடன் ரத்து, மகளிர் குழுவினரின் ரூ.2 ஆயிரம் கோடி கடன் ரத்து… இப்படி தனது செயல்பாட்டினை விவரித்தும் அவர் வாக்கு சேகரித்தார்.

இறுதியாக, உங்கள் சகோதரனான இந்த ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள் என்ற வேண்டுகோளோடு தனது பரப்புரையை நிறைவு செய்திருக்கிறார்.

ஆட்சிக்கு வந்து 10 மாதம் கூட முடிவடையாத நிலையில முதல்வரின் வேண்டுகோளை, உறுதியை நம்பி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அவரது அணிக்கு வாக்களிப்பது தானே நியாயமாக இருக்கும்?

வாக்களிப்போம்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நல்லாட்சி மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img