இந்தி திணிப்பை தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களும் எதிர்க்கின்றன. ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் பல்வேறு மொழிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்தி திணிப்பு, அவர்களது பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை சீர்குலைக்கும் என கருதுகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை தேவநாகரிக்கு மாற்றியதாகவும், 8 மாநிலங்கள் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
இவரது கருத்துக்கு ரோமன் ஸ்கிரிப்ட் ஃபார் கோக்போரோக் சோபா (RSKC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமித் ஷாவின் பேச்சு, பிராந்தியத்தின் பல மாநிலங்களிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
கடந்த வாரம், திரிபுராவில் மாநிலத்தின் பெரும்பாலான பழங்குடியினருக்கான மொழியான கோக்போரோக்கின் எழுத்தாக இந்தி அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 56 பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் இந்தோ-ஆரியம் முதல் திபெட்டோ-பர்மன் வரை, ஆஸ்ட்ரோ முதல் ஆசியாடிக் வரை என பல்வேறு மொழிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
திரிபுராவின் அதிகாரப்பூர்வ மொழியாக கோக்போரோக் 1979 இல் அங்கீகரிக்கப்பட்டது. தற்போது, 22 பட்டப்படிப்பு கல்லூரிகளிலும், திரிபுரா மத்திய பல்கலைக்கழகத்திலும் பெங்காலி மற்றும் ரோமன் எழுத்துக்களைப் பயன்படுத்தி கற்பிக்கப்படுகிறது.
இதனை கைவிட பெரும்பான்மையான அம்மாநில பழங்குடியின மக்கள் விரும்பவில்லை. இந்தி திணிப்பை அவர்கள் விரும்பவில்லை.
இதேபோல மிசோரம் மாநிலத்தில் அதிகம்பயன்படுத்தப்படும் மிசோ மொழி அல்லது மிசோ தாங் ஆகியவை சீன -திபெத்திய குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறோம். அதன் மீது இந்தி எழுத்தை திணிப்பதை ஏற்க மாட்டோம் என அம்மாநில மக்கள் உறுதிபட தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரின் மெய்டேய் மாயெக் அல்லது மணிப்பூரி எழுத்து 2,000 ஆண்டுகள் பழமையானது. இந்த எழுத்து மணிப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு, பத்தாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இன ரீதியாக வேறுபட்ட அருணாச்சல பிரதேசத்தில் பல மொழிகள் பேசப்படுகின்றன. அங்கும், அதேபோல அசாமிலும் இந்தியை திணிப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
தமிழகத்தைப் போல வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தியை எதிர்த்து களம் காண தயாராகி விட்டனர். இதற்கு மேலும் இந்தியை எந்த மாநிலத்திலும் அம்மாநில மக்கள் ஏற்காதநிலையில் திணிப்பதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
மொழியை கையாளும் உரிமையை மாநில மக்களிடமே விட்டு விடுங்கள். இந்தியை படிப்பவர்கள் படிக்கட்டும். மற்றவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு விட்டு விடுங்கள்.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவில் இருக்கும் அத்தனை மொழிகளும் வளரட்டும்; வளம் பெறட்டும்!



