தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இவற்றில் 1,374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன.
138 நகராட்சிகள் இருக்கின்றன. இதில் 3,843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் இருக்கின்றன. 490 பேரூராட்சிகளும் அவற்றில் 7,621 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் இருக்கின்றன. மொத்தமாக 12,838 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
இந்தத் தேர்தல் முடிவடைந்து, வெற்றிபெற்றவர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் நான்காம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கும்.
இவ்வாறு 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
பிரசாரத்தில் தலைவர்கள் இடையே காரசாரமான விவாதம் அனல் பறந்தது.
கட்சிக் கொள்கைகள், முறைகேடுகள் விமர்சிக்கப்பட்டன. அரசியல் கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்கி வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரித்துள்ளனர்.
வாக்காளர்களுக்கும் பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாக திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் கண் கொத்திப்பாம்பாக தேர்தல் ஆணையம் விழிப்புடன் இருந்தாலும் எந்த தேர்தலாக இருந்தாலும் பணம் இறக்கை கட்டி வாக்காளர்களைத் தேடி வருவதை முழுமையாக தடுக்க முடிவதில்லை.
அதேநேரத்தில் பணம் மட்டுமே தேர்தல் முடிவை நிர்ணயிப்பதும் இல்லை. மக்கள் அதில் தெளிவாக இருக்கிறார்கள். யாருக்கு வாக்களிப்பது என்பதனையும் முடிவு செய்து மனதில் பதிவு செய்து விட்டனர்
அதோடு இந்தமுறை உள்ளாட்சித் தேர்தலில் பதவியிடங்களில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியலின பெண்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இதற்கு முன் 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது.
இதோ, அதோ என வந்து விட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் (19ம் தேதி) நடைபெற உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்கப்போகிறோம்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் மட்டுமின்றி பாஜக, அமமுக, தேமுதிக, மநீம, நாதக ஆகிய கட்சிகளும் தனித்தனியாகக் களத்தில் நிற்கின்றன.
மக்கள் பிரதிநிதிகள் ஆளுகையில் இருந்தபோது உள்ளாட்சிகளில் சேவைப்பணிகள், மக்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த முழுமையான, உண்மையான புரிதலோடு நிறைவேற்றப்பட்டு வந்தது. தனி அலுவலர்களும் செயல் அதிகாரிகளும் அதிகாரத்தில் இருந்த கடந்த ஆண்டுகளில் அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது மகாத்மா காந்தியடிகளால் போற்றிப் பேணப்பட்ட கிராமராஜ்யம் தான். உள்ளாட்சி அமைப்புகளின் சரியான செயல்பாடுகளால் மட்டுமே இது சாத்தியம்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் மக்கள் நலப்பணிகளில் தன்னலம் பாராமல், பிரதிபலன் எதிர்பாராது அக்கறையுடன் செயலாற்றுபவர்களே வெற்றிபெற வேண்டும். அப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்போம்.
யாருக்கு உங்கள் வாக்கு?. உள்ளாட்சிகளில் நல்லாட்சி மலர தவறாமல் வாக்களியுங்கள்!



