முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடி. ஆனால் 136 அடி நீர் தான் தேக்கிவைக்கப்பட வேண்டும் என கேரள அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் காரணமாக 142 அடி நீரை தேக்கிவைக்கலாம் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 2014ஆம் ஆண்டில் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பேபி அணையைப் பலப்படுத்திய பின்னர் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் இதற்கு கேரள அரசு எந்தவித மறுப்பும் தெரிவிக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மழை அளவு, பருவக் காலம், நீர்வரத்து போன்றவற்றைக் கணக்கிட்டு ஒவ்வொரு தேதியிலும் இவ்வளவு நீர்மட்டம்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலையும் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
அந்த மாதவாரியான நீர்மட்ட அட்டவணை (ரூல் கர்வ் விதி) இருப்பதால்தான் எங்களால் 142 அடி தண்ணீர் தேக்க முடியவில்லை. விதிப்படி, நவ.30-ம் தேதி அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்குவோம் என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்திருந்தார்.
அதற்கேற்ப அணையின் நீர்மட்டம் 4வது முறையாக தற்போதைய உச்சபட்ச அளவான 142 அடியை எட்டியது. சமீபத்தில்கூட முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சட்ட ரீதியாக 142 அடியாக உயர்த்தப்பட்ட நீர்த் தேக்க அளவு தனது ஆட்சிக் காலத்தில் குறைந்துவிடக்கூடாது என்பதில் மட்டுமல்ல, 152 அடியாக உயர்த்தப்படவேண்டும் என்பதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்; கவனமாக செயல்படுகிறார்.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்து முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் என்றைக்கு 152 அடியாக உயருகிறதோ, அந்த நாள் தான் தமிழ்நாட்டின் 5 மாவட்ட விவசாயிகளுக்கு உண்மையான விடியலைத் தரும் பொன்னாள். விரைவில் வரப்போகும் அந்த பொன்னாளை எதிர்பார்த்து விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயரட்டும். விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமும் உயரட்டும்!



