fbpx
Homeதலையங்கம்முப்படைத் தளபதியின் தீரத்துக்கு வீரவணக்கம்!

முப்படைத் தளபதியின் தீரத்துக்கு வீரவணக்கம்!

ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. நாட்டின் அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து பிபின் ராவத்தின் வீரப்பணி களுக்காகப் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

பிபின் ராவத், பாகிஸ்தானில் நடத்திய துல்லியத் தாக்குதல்களை மேற்பார்வையிட்ட பெருமைக்குரியவர். கடந்த 2015ம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்கள் மீது நாகாலாந்து தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு மியான்மரில் தஞ்சம் புகுந்தனர்.

இதனை அறிந்த இந்திய ராணுவம், மியான்மர் எல்லையை கடந்து சென்று தீவிரவாதிகள் மீது துல்லியத் தாக்குதலை நடத்தியது. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்போது ராணுவத் துணைத் தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த துல்லியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல, 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காஷ்மீரின் ஊரிபகுதியில் அமைந்துள்ள விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலும் பிபின் ராவத் தலைமையில் தான் நடத்தப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்கபாடம் புகட்டும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் அதிரடியாக சென்றுதீவிரவாத முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது.

பிபின் ராவத் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எதிரிகளை அழிக்க வியூகம் வகுப்பதில் வல்லவர் பிபின் ராவத் என்றால் மிகையாகாது.

இத்தனை சிறப்புமிக்க வீரத்தளபதியை இழந்து நாடே வேதனையோடு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது. பிபின் ராவத்துக்கு வீர வணக்கம்!

படிக்க வேண்டும்

spot_img