செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கைகோர்த்தது, ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்றது… இதையெல்லாம் சுட்டிக்காட்டி பாஜகவுடன் திமுக நெருங்கி வருவதாக சிலரால் காட்சிப்படுத்தப்பட்டது.
அதோடு முதல்வர் இன்று டெல்லி சென்றிருப்பதையும் சேர்த்து பின்னி விட்டனர்.இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் மணி விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
‘டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவோ அல்ல. ஒன்றிய அரசு, மாநில அரசு என்ற உறவு தான் இருக்கிறதே தவிர திமுகவுக்கும் பாஜகவுக்குமான உறவு அல்ல’ என்றும் “இதில் சமரசத்துக்கே இடமில்லை. கிஞ்சிற்றும் கவலைப்படத் தேவை இல்லை” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட பேசி விட்டார்.
மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருக்கிறார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், அவர் மேற்கண்டவாறு பேசி இருப்பது கொள்கையில் திமுக கொண்ட உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை.
கொள்கை வேறு, ஒன்றிய – மாநில அரசுகளிடையேயான உறவு வேறு. பிரதமரை வரவேற்க மறுக்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போல ஒன்றிய – மாநில அரசுகள் இடையே முரண்படாமல் உறவைப் பேணுவது அவசியம். அதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். ‘உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்‘ என்பது தானே திமுகவின் கொள்கை.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க ஜனாதிபதியிடம் பேசுமாறு பிரதமர் மோடியிடம் இன்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறும் மத்திய அரசின் மின்சாரச் சட்ட மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார். மேலும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இருவரும் விவாதிக்கின்றனர்.
தமிழகத்தில் புதிதாக நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமருக்கும் முதல்வருக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனவே, மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் வெற்றிகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழகம் முன்னேற இந்தப் பயணம் உதவட்டும். ஒன்றிய அரசுடனான தமிழக அரசின் உறவும் ஓங்கட்டும்!