இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சேலத்தை சேர்ந்த ஜனனி(14) என்ற சிறுமியை திடீரென நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதனால் சிறுமி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். முதல்வர் ஸ்டாலினின் மனிதநேயத்தை அனைவரும் பாராட்டினர்.
சேலத்தை சேர்ந்த ராஜநந்தினி மகள் ஜனனி. பிரைமரி ஹைபர் ஆக்சலேரியா என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட இச்சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது.
கடந்த 2019ல் கோவை தனியார் மருத்துவமனையில் ஜனனிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. ராஜநந்தினி தனது மகளை காப்பாற்றுவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக அளித்திருந்தார்.
மாற்று சிறுநீரகமும் சில மாதங்களில் செயலிழந்து விட்டது. இதனையடுத்து சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து ஜனனிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகளை காப்பாற்ற கோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு ராஜநந்தினி கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். இம்மனு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சரே சிறுமியின் தாயார் ராஜநந்தினியை தொடர்பு கொண்டு கோரிக்கை மனு குறித்து கேட்டறிந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வர உத்தரவிட்டதை தொடர்ந்து சிறுமி ஜனனி கடந்த 16ம் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகவியல் துறை தலைவர் எட்வின் தலைமையில் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு நடத்திய ஆய்வில் சிறுமிக்கு ஒரே நேரத்தில் சிறுநீரகமும், கல்லீரலும் மாற்றினால் தான் அவரை குணமாக்கிட முடியும் என தெரியவந்துள்ளது.
எனவே உறுப்பு தானம் பெறுவதற்காக பதிவு செய்துவிட்டு ஜனனி காத்திருந்தார். அதுவரை டாயலிசிஸ் சிகிச்சையை தொடர மருத்துவர்களும் முடிவு செய்துள்ளனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஜனனியின் நிலை முதல்வரின் கவனத்துக்கு சென்ற நிலையில் திடீரென ஸ்டான்லி மருத்துவமனைக்கு முதல்வர் நேரில் சென்று ஜனனி மற்றும் அவரது தாயார் ராஜநந்தினிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி, சிறுநீரகவியல் சிகிச்சை துறை தலைவர் டாக்டர் எட்வின் ஆகியோரிடம் சிறுமிக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த முதல்வர், மேலும் தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து அளிக்கும் என உறுதியளித்தார். முதல்வரின் இந்த மனிதநேய செயலை அனைவரும் பாராட்டினர்.



