fbpx
Homeதலையங்கம்முகக்கவசம் மிக மிக அவசியம்

முகக்கவசம் மிக மிக அவசியம்

நாட்டின் மொத்த கொரோனா பாதிப் பில் 69 சதவீதம் கேரளாவில் தான் என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 100 பேருக்கு கேரளாவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் ஏறத்தாழ 20 பேருக்கு கொரோனா இருக்கிறது. இந்த பண்டிகை தினங்களில் மக்கள் வெளியே அதிகமாக நடமாடியது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

எனவே கேரளா தந்த பாடம் தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் எங்கேயும் செல்லக்கூடாது. சமூக ஒன்று கூடல்களை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். ஓணம் பண்டிகைக்கு பிறகு எப்படி கேரளாவில் கொரோனா பரவியதோ அதேபோல் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க இனி அடுத்தடுத்து வரும் பண்டிகை காலங்களில் கூடுமானவரை வெளியே செல்லாமல் வீட்டிலேயே பண்டிகைகளை கொண்டாடிக்கொள்ள வேண்டும்.

பண்டிகை கொண்டாட்டம் பெரிதா? உயிர் பெரிதா? என்ற கேள்வியை எழுப்பினால் நிச்சயமாக உயிர் தான் பெரியது. கொரோனா முழுமையாக ஒழிந்த பிறகு பண்டிகைகளை வெளியேயும் கொண்டாடலாம். சுதந்திர தினத்தன்று கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றும்போது பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்ற உத்தரவு முன் மாதிரியான உத்தரவாகும்.
அதுபோல இப்போது விநாயகர் சதுர்த்தி மற்றும் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா உட்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது மக்களுக்கு நல்ல படிப்பினையாகும். மொத்தத்தில் எங்கும் எப்போதும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும், முகக்கவசம் அணிவதுமே தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நல்ல வழிமுறைகளாகும்.

படிக்க வேண்டும்

spot_img