fbpx
Homeதலையங்கம்மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் வேண்டும்!

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு சட்டம் வேண்டும்!

கொரோனா பரவாமல் தடுப்பதிலும் தொற்று பாதித்தவர்களின் உயிரை காப்பாற்றுவதிலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானது.

இதில் அவர்களின் உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பைக் காண முடிகிறது. இந்த நிலையில் மருத்துவர்களுக்கு அகில இந்திய அளவில் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் எனக் கோருகின்றனர்.

இந்திய மருத்துவ சங்கத் தேசிய தலைவர் ஜெயலால் கருத்தை உதாசீனப்படுத்தி விடமுடியாது. அவர் கூறுகிறார்: மருத்துவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

கொரோனா நோய்க்கான மாத்திரை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய அரசு அனுமதித்தால் மட்டுமே இங்கு இருக்கும் டாக்டர்கள் அதிகளவில் அந்த மாத்திரையை பயன்படுத்துவோம்.

இந்தியாவில் 23 மாநிலங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு முன்வந்து அகில இந்திய அளவில் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து சிகிச்சை முறைகளையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்பட ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது. அனைத்து வியாதிகளையும் ஒரே மருத்துவ சிகிச்சை மூலம் தீர்க்க முடியாது.

மிக்சோபதி என்ற மருத்துவ திட்டத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு ஜெயலால் கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு சூழ்நிலைகளுக்கும், தட்பவெப்ப நிலைகளுக்கும் வாழ்வாதாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள், கிடைக்கும் நோய் தீர்க்கும் பொருட்களுக்கேற்ப மருத்துவமுறைகள் மாறுபடுகின்றன. ஆனால் மிக்சோபதி என்பது பல மருத்துவமுறைகளின் திடீர் கூட்டு.

ஆகவே அலோபதி மருத்துவர்கள் அதை எதிர்ப்பதில் தவறில்லை. நீண்ட நெடும் ஆராய்ச்சிக்குப் பின்னரே முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உயிர்களை காக்கும் மருத்துவத்தை சீரழிக்காது எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்.

படிக்க வேண்டும்

spot_img