கடந்த மாதம்(நவம்பர்) பெய்த தொடர் பெருமழை தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டது. 2015ம் ஆண்டு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை விட, சென்னையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.
பல மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் போன்ற மிக அவசியமான கட்டமைப்புகளை சீர்செய்ய பெருமளவில் நிதி தேவைப்படுகிறது. இம்மாதிரியான இயற்கை பேரிடர் கால பாதிப்பை சரிசெய்ய மத்திய அரசு நிதி உதவி வழங்குவது வழக்கம்.
தமிழக முதல்வரோடு பேசிய பிரதமர் மோடி, வெள்ளப் பாதிப்புகளை கேட்டறிந்ததோடு, தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்றும் உறுதியளித்தார்.
பாதிப்புகளை சரிசெய்ய இடைக்கால நிவாரணம் வழங்குமாறு கடந்த நவம்பர் மாத மத்தியில் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இடைக்கால நிதி உதவி எதுவும் வழங்கப்படவில்லை.
மத்திய குழு ஆய்வு செய்து சேதத்தை மதிப்பிட்ட பின்னரே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மத்திய குழுவும் வந்து தமிழக வெள்ளப் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தது. அக்குழுவிடம் தமிழகத்துக்கு மழை மற்றும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.4,626 கோடி தர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை மத்திய அரசிடமிருந்து நிவாரண நிதி குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
வழக்கமாக ஓரிரு வாரங்களில் கேட்டது கிடைக்காவிட்டாலும் குறைவான நிதியாவது கிடைத்துவிடும். ஆனால் இம்முறை தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காமல் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது ஏன்? இதில் என்ன நியாயம் இருக்கிறது?
வெள்ள நிவாரண நிதியை பெற மத்திய அரசுக்கு தமிழக அரசு மேலும் அழுத்தம் தர வேண்டும். ஏனெனில் அந்த நிதி வந்தால் தான் தமிழகத்தில் பல்வேறு நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் கவனம் எல்லாம் அந்த பக்கமே இருக்கிறது. அவரது பார்வை தமிழகத்தின் பக்கம் கொஞ்சம் திரும்ப வேண்டும். இயற்கை பேரிடருக்கு நிவாரணம் வழங்குவது முக்கியம் அல்லவா?
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரும் மத்திய அரசுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி நிவாரண நிதி விரைவாக, கூடுதலாகக் கிடைக்க தங்கள் பங்கை செலுத்தலாமே!



