தலைக்கேறிய போதையுடன் வகுப்பறையில் மாணவர்கள் கலாட்டா, அரசுப் பேருந்தில் மது அருந்தும் பள்ளி மாணவிகள், விடுதியில் இளம்பெண்கள் போதையில் ஆபாச நடனம்…
இதுபோன்ற காட்சிகளெல்லாம் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இன்னும் என்னென்ன அவலக் காட்சிகளையெல்லாம் காண வேண்டியிருக்குமோ தெரியவில்லை.
அரசு இயந்திரத்தை இயக்கத் தேவையான பெரும் நிதியை மதுக்கடைகள் தந்து கொண்டிருக்கின்றன. அதனால் உடனடியாக மதுக்கடைகளை மூடுவதற்கான சாத்தியக்கூறு அரசுக்கு இல்லை.
முன்பெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மதுக்கடைகள், தற்போது வீட்டுக்கு அருகிலேயே வந்து விட்டன. கடைவீதிகளிலும் மதுக்கடைகள் உள்ளன.
மதுப் பழக்கத்திற்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில் அதனைக் குறைக்க என்ன செய்யலாம்? பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களை அதில் இருந்து எப்படி மீட்டெடுக்கலாம் என்பதைத்தான் தற்போதைக்கு சிந்திக்க வேண்டியதிருக்கிறது. இதனைத்தான் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடித்துரைத்துள்ளது.
சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.
இல்லையெனில், மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்` என நீதிபதிகள் கண்டிப்புடனும் வேதனையுடனும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மதுக்கொள்கையைக் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிடுகிறது.
ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
நாட்டின் எதிர்காலமே இவர்கள் கையில் தான் இருக்கிறது என்று கணிக்கப்படும் இளைஞர்களை போதையில் இருந்து காப்பாற்றத்தான் வேண்டும்!



