கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒருவர் குடித்து விட்டு போதையில் தண்டவாளத்தின் நடுவே படுத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் திடீரென பெரியநாயக்கன்பாளையம் அருகே நிறுத்தப்பட்டது. காரணம் புரியாமல் பயணிகள் பதற்றத்துடன் ரயிலை விட்டு கீழே இறங்கிப் பார்த்தனர்.
அப்போது ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் ஒருவர் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மெதுவாக வெளியே வரவழைத்து மீட்டனர்.
அப்போதுதான் அந்த நபர் குடிபோதையில் ரயில் வருவது கூட தெரியாமல் தண்ட வாளத்தில் படுத்துத் தூங்கியது தெரியவந்தது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தின் நடுவே ஒருவர் படுத்திருப்பதை அறிந்து உடனே ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனாலும் ரயிலின் சில பெட்டிகள் போதை ஆசாமியைக் கடந்து சென்று நின்றது.
ஆனால் அவருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து ரயில்வே அதிகாரிகளும், பொது மக்களும் அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



