fbpx
Homeபிற செய்திகள்பூங்காக்களை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

பூங்காக்களை தூய்மையாக பராமரிக்க மாநகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தல்

கோவை நகர் பூங்காக்களில் குப்பை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலப் பகுதிகளில், தூய்மைப் பணியாளர்கள் மேற் கொள்ளும் பணிகள், பூங்கா பராமரிப்புப் பணிகள் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஆக.13) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.36-க்கு உட்பட்ட சித்ரா பகுதியில், ஏர்போர்ட் சாலையில் தூய்மைப் பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற் கொண்டார் ஆணையாளர். தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அனைவரும் பணிக்கு வருகை தந்துள்ளார்களா என கேட்டறிந் தார்.

தூய்மைப் பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வருகை தர வேண்டும். வீடுதோறும் குப்பை சேகரிக்கும்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி நீர் தேங்காமல் செல் லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும். கொசு வினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.

தூய்மையான மாநகராட்சியாக திகழ பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றார் ஆணையாளர்.

கிழக்கு மண்டலம் வார்டு எண்.35 ரங்கசாமிகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், அடிப்படை கட்டமைப்பு வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆர்.ஜி.புதூர் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி சிறுவர் பூங்கா மற்றும் பி.எல்.எஸ்.நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காக்களில் ஆய்வு மேற்கொண்டார். பூங்காக்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்களிடம், பூங்காக்களின் உட்பகுதி மற்றும் சுற்றுப்புறத்தினை குப்பை இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

வார்டு எண்.36க்கு உட்பட்ட சேரன் மாநகர் பகுதியில், புதிய தார்சாலை அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். சாலையின் தரம் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, செயற்பொறியாளர் (கிழக்கு) ஞானவேல், கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img