தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய குரூப்-1 தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமமான கிழக்கு செட்டியாப்பட்டியில் – எளிய குடும்பத்தைச் சார்ந்த பவனியா என்ற பெண், தமிழில் படித்து எந்தவித சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லாமல், தானே வகுப்பறையில் படித்து முன்னேறி, முதல் முயற்சியிலேயே நேரடியாக டி.எஸ்.பி. ஆகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சொந்த ஊரில் டீக்கடை வைத்து நடத்தி வரும் வீரமுத்து & வீரம்மாள் தம்பதியினரின் 3 வது மகள் தான் பவனியா. தன் குடும்பச் சூழலை உணர்ந்த பவனியா விவசாய கூலி வேலைக்கு சென்றுகொண்டே தனது படிப்பையும் தொடர்ந்து வந்துள்ளார்.
அவரது உழைப்புக்கு தற்போது உயர்வு கிடைத்திருக்கிறது.
பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது, அதுதான் சனாதன தர்மம் என்று கல்விக்குத் தடை போட்ட ஒரு சமூகத்தில், இப்படி ஒரு அரிய சாதனை செய்து, அறிவுக் கூர்மையும், அதனை மூல தனமாக்கி உத்தியோகமும் அடைய எம்மால் முடியும் என்று காட்டிய பவனியாவை எத்தனை பாராட்டினாலும் தகும்.
கிராமம், ‘தமிழ் வழி படிப்பு… எதுவும் உயருவதற்கு தடையில்லை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்; வழிகாட்டி இருக்கிறார், பவனியா.
அமரப்போகும் டிஎஸ்பி பதவியில் இருந்து தன்னால் முடிந்த அளவு மக்களுக்குச் சேவை செய்யப் போவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
பவனியாவின் வெற்றிக்கதை, இளம் தலைமுறையினருக்கு பாடமாக அமையட்டும்.வாழ்த்து பாடி பாராட்டுவோம்!



