fbpx
Homeதலையங்கம்நீர்நிலை ஆக்கிரமிப்புகள்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்!

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவது இன்று நேற்றல்ல காலங்காலமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதேபோல ஆக்கிரமிப்பை அகற்றும் பணியும் நடக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றித்தான் தற்போது அதிகம் பேசப்படுகிறது.

தமிழகத்தில் ஏராளமான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சென்னையில் மட்டும் 950 நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளன. காலப்போக்கில் அவை பிரம்மாண்ட கட்டிடங்களாக மாறி தற்போது கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

கனமழை வெள்ளத்தால் சென்னை பெருநகரம் வெள்ளத்தில் மிதக்கும் நிலைக்கு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து ஆண்டுக்கு ஓரிரு மாதங்கள் குடிநீருக்கே அல்லாட வேண்டிய நிலை உருவாகிறது.

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் கையிலெடுத்து விசாரித்து வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கெனவே உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

இந்த விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் படி, ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீர் நிலைகளை மீட்டு அதை பாதுகாப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9,802 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு புனரமைக்கபட உள்ளன.

இதில் 147 நீர் நிலைகள் ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளன.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மட்டுமின்றி வனப்பகுதி உள்ளிட்ட அனைத்து வகை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டியதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு மாற்று இடம் ஒதுக்குதல் உள்ளிட்ட ஒருசில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.

இருப்பினும் தமிழக அரசு ஒரு சவாலாக ஏற்று இப்பணியில் இன்னும் வேகம் காட்ட வேண்டியது அவசியம். நீதிமன்றமும் அதைத் தான் எதிர்பார்க்கிறது!

படிக்க வேண்டும்

spot_img