fbpx
Homeபிற செய்திகள்தொழில்முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தில் 1,100 பயனாளிகளுக்கு 5,500 ஆடுகள் வழங்கல்- முதல்வருக்கு விருதுநகர் பெண்கள் மனதார...

தொழில்முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தில் 1,100 பயனாளிகளுக்கு 5,500 ஆடுகள் வழங்கல்- முதல்வருக்கு விருதுநகர் பெண்கள் மனதார நன்றி

ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/ கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறி ஆடுகள்/ வெள்ளாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 ஆடுகள் என்ற விகிதத்தில் 1100 பயனாளிகளுக்கு மொத்தம் 5,500 ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள்/ கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறி ஆடுகள்/ வெள்ளாடுகள் வழங்கி பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின் கீழ், ஆடுகளைப் பெருக்கி பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 ஆடுகள்
விருதுநகர் மாவட்டத்தில் ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 பெட்டை ஆடுகள் மற்றும் 1 கிடா என மொத்தம் 5 ஆடுகள் என்ற விகிதத்தில் ஓர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகளுக்கு 500 ஆடுகள் என விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 பயனாளிகளுக்கு மொத்தம் 5,500 ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், சாத்தூர் ஒன்றியத்தில் 100 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 100 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பயனாளிக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.3500/- வீதம் 5 வெள்ளாடுகள்/ செம்மறி ஆடுகள் (1 கிடா மற்றும் 4 பெட்டை ஆடுகள்) தலா ரூ.17,500/- என்ற விகிதத்தில் மொத்தம் 200 பயனாளிகளுக்கு 09.07.2022 அன்று நடைபெற்ற விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரம்ப கட்டச் செலவினமாக பயனாளிக்கு ஆடு 1க்கு ரூ.200/- வீதம் 5 ஆடுகளுக்கு மொத்தத் தொகை ரூ.1000/-பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

ஒரு பயனாளிக்கு அரசால் வழங்கப்படும் 5 ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு, அரசு செலவில் 2 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540.75 வீதம் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது. ஓர் ஒன்றியத்திற்கு இத்திட்டத்திற்காக 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19,04,075/- வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது

100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள் பெற்ற பயனாளிகளின் நெகிழ்ச்சி பேட்டிகள்:
“இருள் சூழ்ந்த வாழ்க்கையில் ஒளிவிளக்கு”
எனது பெயர் பஞ்சவர்ணம். சாத்தூர் ஒன்றியம், மேட்டமலையில் வசித்து வருகிறேன். கணவர் இறந்துவிட்டதால், கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கூலி வேலை செய்வதில் சொற்ப வருமானம் மட்டுமே கிடைக்கிறது. இதில் எனது குடும்பத்தை நடத்துவதில் சிரமம் இருந்தது. தற்போது எனக்கு தமிழக அரசு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கி இருக்கிறது. நானே நேரில் சென்று சந்தையில் எனக்கு பிடித்தமான 5 வெள்ளாடுகளை வாங்கியுள்ளேன்.

வேலைக்குச் செல்லும் இடங்களுக்கு இவற்றை அழைத்து சென்று மேய விட்டு வேலை செய்வேன். இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி 5 ஆடுகளில் குட்டி ஈன்றால் அதையும் சேர்த்து வளர்ப்பேன். இதன் மூலம் ஆடுகள் பெருகிக் கொண்டே இருக்கும். அவற்றை விற்று பணம் சேர்த்து எனது குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வேன்.

எனது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைத்த முதல்வருக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் என்றார்.

“ஆட்டு மந்தையை உருவாக்குவேன்”
எனது பெயர் பாண்டியம்மாள். ஊர் சாத்தூர் ஒன்றியம் படந்தால். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால், கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு கிடைக்கும் விவசாயக் கூலியில் எனது குடும்பத்தை நடத்துவதில் மிகவும் சிரமப்பட்டேன்.

விலையில்லா ஆடுகள் பெற மனு செய்திருந்தேன். எனக்கு விலையில்லா ஆடுகள் வாங்க அனுமதி கிடைத்தது. அதில் 4 பெண் ஆடுகளும், ஒரு கடாய் ஆடும் வாங்கி உள்ளேன். இந்த ஆடுகளை எனது குழந்தைகள் போல வளர்த்து இன விருத்தி செய்து சில ஆண்டுகளில் ஆட்டு மந்தையாக உருவாக்கிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இனி நானும் ஐந்து ஆடுகளுக்கு சொந்தக்காரி, இதை நினைத்தால் மனசு சந்தோஷமா இருக்கு.

எனது எதிர்காலம் பற்றிய கவலை இல்லை. ஆடுகளுக்கு இலவசமாக குடல்புழு நீக்கம், தடுப்பூசி எல்லாம் போடுவதாக கால்நடை மருத்துவர் சொன்னார். அதன்படி நோயற்ற சிறந்த ஆடுகளை வளர்க்க முடியும். இந்த நம்பிக்கையை என்னை போன்ற ஏழ்மை நிலையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு அளித்த அரசுக்கு நன்றி என்றார்.எனது பெயர் மஞ்சுளா.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். விலையில்லா ஆடுகள் எங்களுக்கு வழங்க போறதா சொன்னதும் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டுமென நினைத்து மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், ஆடுவளர்க்க, காப்பீட்டுத் தொகை என அனைத்து செலவு தொகையையும் அரசே கொடுத்தாங்க. நினைக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பொருளாதாரத்தில் முன்னேற வழி இல்லாமல் இருந்தேன். வேலை கிடைக்காத காலத்தில் வீட்டில் சும்மா தான் இருந்தேன். இனி அப்படி இல்லை. வேலை உள்ள நாட்களில் காலை, மாலை இருவேளையும், வேலை இல்லாத காலத்தில் பகல் பொழுது முழுவதும் ஆடுகளை மேய்த்து நன்றாக வளர்ப்பேன்.

எனக்கும் சொந்தமாக 5 ஆடுகள் இருக்கு என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கு. 1 ஆடு வாங்கி வளர்க்கக் கூட பணம் இல்லையே என்று ஏங்கிய காலம் மாறி இன்று நானும் 5 ஆடுகள் வைத்துள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திய முதல்வருக்கு நன்றி.

தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் வறுமையின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஏழை, எளிய பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருவதால், வறுமை என்ற வார்த்தை அகராதியில் இருந்து நீக்கப்படும் காலம் மிக விரைவில் எழும்.
“பறந்தது பணம் இல்லையே என்ற ஏக்கம்”

தொகுப்பு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
விருதுநகர் மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img