அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலம் உவால்டே நகரில் உள்ள ரோப் என் கிற ஆரம்பப் பள்ளியில் படித்துவந்த இளம் மொட்டுகளான- 19 மாணவச் செல்வங்கள், இரண்டு ஆசிரியர்கள் உள்பட மொத்தம் 21 பேரை – அப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார். இது மனிதநேயம் மரணித்த மகா கொடுஞ்செயல்.
அமெரிக்கா வளர்ந்த நாடு என்ற பெருமையை தொழில்நுட்ப விஞ்ஞானத் துறையில் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இதுபோன்ற அட்டூழியச் செயல்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.
இப்படி திடீரென அங்காடிகளில் துப்பாக்கிச் சூடு, வழிபாட்டு நிலையங்களில், கல்வி நிலையங்களின் உள்ளே புகுந்து திடீர் துப்பாக்கிச் சூடு என்பதற்கு எப்போது, எப்படி முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது அமெரிக்கா? இந்த காட்டுமிராண்டித்தனத்தை வேரோடு ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், அதிபர் ஜோபைடன்-?
துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது என ஜோ பைடன் கூறி இருக்கிறார். எந்த தருணத்துக்கும் இனியும் காத்திருக்கத் தேவையில்லை.
அதிகாரம் அவர் கையில் தானே இருக்கிறது-.
போதிய கட்டுப்பாடுகளை விதித்து, வெளியே செல்பவர்களுக்கு, பள்ளிக்குச் செல்பவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை என்ற கொடுமைக்கு முழு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மிகவும் அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட.
அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் துப்பாக்கிக் கலாச்சாரம் ஒழியட்டும்!



