ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு தினம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்று 1938 ம் ஆண்டிலேயே போராட்டம் தொடங்கி விட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்றது.
அரசின் அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, உயிர்த்தியாகம் என்று நீடித்த போராட்டங்களுக்கு பிறகே மத்திய காங்கிரஸ் அரசாங்கம் மொழிவாரி மாநிலங்கள் என்ற கோரிக்கையை ஏற்று 1956 நவம்பர் 1ம் தேதி சென்னை மாநிலம் உருவானது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தமிழ் மொழி அடிப்படையிலான மாநிலம் உருவான போதும், அதற்கு சென்னை மாகாணம் என்றே பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் வலுவாக குரல் கொடுத்தார்கள்.
நாடாளுமன்றத்தில் 1961ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டுமென சட்டத்திருத்த மசோதா முதன்முதலில் கொண்டு வரப்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரலிங்கனார் விருதுநகரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தினைத் தொடங்கி 76 வது நாளில் உயிரைத் துறந்து தியாகி ஆனாரே? அதனை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இறுதியில் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி தோற்கடிக்கப்பட்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகே, 1967ம் ஆண்டு ஜூலை 18ந் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்த தினம் உயிர்த்தியாகம், நீண்ட போராட்டம் என வரலாற்று முக்கியத்துவம் கொண்டது தான். மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டது 1956 நவம்பர் 1 என்பதும் வரலாற்று உண்மை.
இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. எனவே, மேற்கண்ட இந்த இரண்டு வரலாற்று நிகழ்வுகளையும் கொண்டாடுவதே பொருத்தமானதாக இருக்கும்.
தமிழுக்காக, தமிழ்நாட்டுக்காக இரு தினங்களையும் கொண்டாடுவோமே. அறிவிப்பு வெளியான பின், இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது?. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!



