தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்பட நாட்டின் 12 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 1.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த அக்டோபர் மாதத்தில்தான் அதிக எண்ணிக்கையில் டெங்கு பாதிப்பு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ மழையே அதற்கு முக்கிய காரணம்.
டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மழை மற்றும் குளிர்காலத்தில் தான் அதிகமாக பெருக்கம் அடைக்கின்றன.
நாட்டிலேயே அதிகப்பட்சமாக உத்தரபிரதேசத்தில் 21,954 பேரும் அடுத்தபடியாக பஞ்சாபில் 16,910 பேரும், ராஜஸ்தானில் 10,000 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 3,806 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களில் 495 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
பிற மாநிலங்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும், மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
தங்கள் பகுதியில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கும் வகையில் கிடக்கும் பழைய டயர், தேங்காய் சிரட்டை உள்ளிட்ட பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ஓரிரு முறை டெங்கு காய்ச்சல் நம்மை அவதிக் குள்ளாக்கி வருகிறது. உயிர்களையும் பறித்துச் செல்கிறது. தற்போதும் நம்மை டெங்கு காய்ச்சல் மிரட்டுகிறது. அண்டவிடாமல் துரத்துவோம்!



