பாஜக ஒன்றிய அரசு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை ஜிஎஸ்டி வரி எல்லைக்குள் சேர்த்து 5 சதவீதம் வரி விதித்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அனைத்து அத்தியாவசிய உணவுப்பண்டங்களின் விலைகளும் வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்த்தப்பட்டு வாழ்க்கை செலவுச் சுமையை ஏற்றியுள்ளது.
இந்த நிலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் பாஜக ஒன்றிய அரசு உணவு உரிமையை பறித்து, உணவு பாதுகாப்புச் சட்டத்தை அர்த்தமிழக்க செய் கிறது.
மேலும் உணவு தானிய வணிகத்திலும், சில்லரை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவோர்களை அத்தொழிலில் இருந்து வெளியேற்றி, கார்ப்பரேட் வணிகத்தை ஊக்கப்படுத்தும் வகையில் செயல் படும் வஞ்சகச் செயலை கண்டித்து வணிகர் சங் கங்களும் போராட்டத்தை கையிலெடுத்து உள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை எனில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதற்கான தேதியை அறிவிக்க இருக்கிறோம். அடுத்த கட்டமாக மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
அதற்கு பிறகும் ஒன்றிய அரசு பிடிவாதமாக ஜி.எஸ்.டி வரி விதிப்பை திரும்பப் பெறவில்லை எனில் டெல்லிக்கு சென்று போராடத் தீர்மானித்து உள்ளோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வணிகர்கள் போராட்டம் நியாயமானதே. கொரோனா தொற்றிற்கு பிறகு மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் முழுமையாக மீண்டுவர இன்னும் சில காலம் ஆகும். இதனை கருத்தில் கொண்டு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்களை திரும்ப பெற வேண்டும் என்பதே வணிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வேண்டுகோள்; விருப்பம்.
ஒன்றிய அரசு செவி சாய்க்குமா?



