அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளிகளில் பேச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தேர்முட்டி பகுதியில் உள்ள துணி வணிகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் முன்பே பள்ளிகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு தேசத்தின் ஒளிவிளக்கு அம்பேத்கர், அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அம்பேத்கரின் வறுமை, அம்பேத்காரும் கல்வியும் என 11 தலைப்புகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வருக்கும் தலா 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது.
கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில், முனைவர் சாந்தி உட்பட 6 அரசு மற்றும் தனியார் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தனர்.
பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெற உள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்பர்.