முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, அதனை தொடர்ந்த கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஏன்? கொடநாடு வழக்கின் முக்கிய சாட்சியான சயானின் வாக்குமூலம் தான் அதற்கு காரணம். அதன்படி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
இந்த தகவல் வெளியானதும் அதிமுக கொந்தளித்தது.
சட்டசபையில் இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேச முற்பட்ட போது, சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசர அவசரமாக கவர்னரிடம் முறையிட சென்றது அதிமுக அணி. இந்த விவகாரம் பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது.
இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பாஜகவும் ஆர்வம் காட்டுவதாக தெரியவில்லை.
தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான குற்றச்சாட்டுகளை மக்கள் முன் வைத்து திமுக ஆட்சிக்கு வந்தால் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அது, அவர் முதல்வரான பிறகு இப்போது மறு விசாரணையாக வடிவம் பெற்றிருக்கிறது. இந்த விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் வார்த்தை மோதலில் ஈடுபடுவது ஒரு புறம் இருந்தாலும், கொடநாடு வழக்கில் உண்மை எதுவானாலும், வெளிப்பட்டு நீதி வெல்ல வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.
மறைக்கப்பட்ட உண்மை எதுவாக இருந்தாலும் வெளிவரட்டுமே.
இந்த விவகாரத்தில் ‘ எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பிறகும் விசாரணையை எதிர்கொள்ள அதிமுகவுக்கு என்ன தயக்கம்? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து விசாரணையை எதிர்கொள்ள முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி தயங்கக் கூடாது.
விசாரணை எந்த கோணத்தில் சென்றாலும் மறு விசாரணை நடந்தாலும் நீதி தானே வெல்ல போகிறது. பிறகு ஏன் கவலை?



