fbpx
Homeபிற செய்திகள்குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

கோவை சைல்டுலைன் 1098-க்கு பொதுமக்கள் அளித்த தொலைபேசி புகார் தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்திற்கு, தகவல் கிடைத்ததன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவுப்படி தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் காவல் துறை மற்றும் சைல்டுலைன் அமைப்பினர், மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக் கடை பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது 14 வயதிற்கு கீழ் உள்ள இரண்டு குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட 2 வளர் இளம் பருவத்தினரை பணியில் இருந்து மீட்டு வந்தனர்.

மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களும் குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப் பட்டனர். சிறுவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளருக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்படும்.

பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அத்துடன் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வு நடவடிக்கைகளில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குனர் என்.ஹரிணி, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட கள அலுவலர் பிஜீ அலெக்ஸ், காவலர் எஸ்.என்.மீரன் மற்றும் சைல்டுலைன் களப்பணியாளர் சன்ஜோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீட்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளை பணிக்கு அமர்த்தியவரை தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்ட அலுவலகத்திற்கு வரவழைத்து குழந்தைகளை பணிக்கு அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.

குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு திட்ட இயக்குனர் டி.வி.விஜயகுமார் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img