கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா தியேட்டர்கள், கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் இன்று திறக்கப்பட்டு விட்டன.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்தும் துவங்கி விட்டது.
முதல் நாளான இன்றே சென்னை மெரினா கடற்கரை போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது, அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட இடங்களில் எல்லாம் கொரோனா விதிமுறைகளை மக்கள் மீறினால் என்ன நடக்கும்? கொரோனா மூன்றாவது அலை உருவாகுமோ என்ற அச்சம் இருக்கும் வேளையில் தொற்று மீண்டும் பரவும் பேராபத்து உருவாகி விடும்.
இதனை தடுத்தே ஆக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு ஒரே வழி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இது பழைய பல்லவியாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியே ஆக வேண்டி இருக்கிறது.
அரசும் அதைத்தான் சொல்கிறது. அவற்றை மக்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.
தளர்வுகளை அறிவித்த அரசு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இச்சூழலில் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் பிளஸ் டூ வரை வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படுகிறது. அடுத்து எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் துவக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதெல்லாம் சுமூகமாக நடந்திட வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்? தற்போதைய தளர்வுகளால் தொற்று பரவாமல் கவனமாக இருக்க வேண்டும்; இருந்தே தீர வேண்டும். அதுதான் நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.



