என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும், மாணவ, மாணவிகளுக்கும் வகுப்பறைகளுக்குமான உறவை அதில் பார்க்க முடியவில்லை. ஆசிரியர்களின் நேரடியான பகிர்வின் நெருக்கம் அதில் இல்லை.
நல்லவேளையாக தற்போது பள்ளிகள் கொரோனா தளர்வுக்கு பிறகு திறக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான மாணவ, மாணவிகள் பள்ளி சூழலுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள்.
அரசு பள்ளிகளின் மீது பெற்றோரின் கவனம் பெரிதும் குவிந்து வருவதை பாராட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கல்விதரம் உயர நிதி நிலை அறிக்கையில் வரும் நிதியாண்டில் 32,599 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது ஆரோக்கியமான அறிகுறி.
பள்ளிகள் திறக்கப்பட்டதும், குறிப்பிட்ட சில பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாதிப்பு பரவலாக இல்லை என்பது ஆறுதல்.
இருந்தும் கொரோனா மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கைகளை அனுசரித்து முகக்கவசம் போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் பள்ளிகள் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.
கொரோனாவினால் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டிருக்கலாம். அதே சமயம் எந்த விதத்திலும் அவர்கள் கல்வி கற்பதில் நம்பிக்கை இழந்து விடக்கூடாது.
கொரோனாவை மீறி கற்றல் நன்றே என்பதை உணர்த்தியாக வேண்டும்.



