fbpx
Homeபிற செய்திகள்கல்லூரி பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

கல்லூரி பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் இயற்பியல், வேதியியல், கணிதவியல் துறை சார்பில், ‘கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் அடிப்படை அறிவியலின் வாய்ப்பு மற்றும் மேம்பாடு’ என்ற தலைப்பில், கல்லூரி பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி, கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நேற்று (நவ.22) நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக வளாக மத்திய பாதுகாப்பு அமைச்சக உயிர் அறிவியல் மைய விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து கூறியதாவது:

ஒரு நாடு வல்லரசாக மாறுவதற்கு மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம். அவை பொது அறிவு, பொருளாதாரம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை. நம் நாடு இம்மூன்றிலும் சிறந்து விளங்குகிறது.

கூடிய விரைவில் நம் நாடு வல்லவரசாகும். இருந்தபோதிலும் இந்தியா முழுவதும் சுகாதாரத்துறையில் முன்னேற்றம் காண்பது அவசியமாகிறது.

இந்நிலையில் ஒவ்வொருவரும் தனித்தனியாக உழைத்தால் வெற்றி பெற முடியாது. குழுவாக உழைக்க வேண்டும். குழு முயற்சியே வெற்றியைத் தேடித் தரும். அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்றவை அடிப்படையாகும். இவற்றில் நாம் பலமாக உள்ளோம். அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினால் தான் வெற்றி பெறுவது எளிதாகும்.
இவ்வாறு விஞ்ஞானி முனைவர் கே.கதிர்வேலு கூறினார்.

பி.எஸ்சி. வேதியியல் மூன்றாமாண்டு மாணவி ஜி.ஐஸ்வர்யா, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்காகவும், கணிதம் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறை இரண்டாமாண்டு மாணவி எஸ்.ரித்திகா, அகில இந்திய அளவில் எம்டிடிஎஸ் நடத்திய பாடத்தில் தேர்ச்சி பெற்றதற்காகவும், நியூடோனியன் நேஷன் என்ற யூடியூப் சேனல் உருவாக்கிய இயற்பியல் மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பூங்குழலி, கணிதத்துறைத் தலைவர் முனைவர் என்.உமா, வேதியியல் துறைத்தலைவர் முனைவர் டி.சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்பயிற்சி முகாம் வரும் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img