ஒமைக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பதற்கு முன் இந்தியாவில் இருந்த சூழலைப் பார்த்தால், 2022ம் ஆண்டிலிருந்து, மக்கள் கொரோனா வைரஸுக்கு முன்பிருந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள் என்றே தோன்றியது. ஆனால், இந்த வாய்ப்பு ஒமைக்ரான் வைரஸ் பரவலால் குறைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் 3 பேர், பிம்ப்ரியில் 4 பேர், புனேவில் 7 பேர் என மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உள்ளது.
மகாராஷ்டிரா -17, ராஜஸ்தான் -9, கர்நாடகா- 2, குஜராத் -3, டெல்லியில் ஒருவருக்கு என நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பரவலைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு தென்படுகிறது.
ஒமைக்ரான் வைரஸ் ஏராளமான உருமாற்றங்களுடன் வந்துள்ளது.
இதுவரை உருவான கொரோனா வைரஸ்களிலேயே அதிகமான மாற்றங்களுடன் இருக்கிறது. அதனுடைய ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்கள் உள்ளன. இதன் காரணமாகவே டெல்டா வைரஸைவிட, அதிவேகமாக பரவும் தன்மை உடையதாக ஒமைக்ரான் மாறியுள்ளது.
தற்போது கிடைத்த புள்ளிவிவரங்கள்படி 63 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஒமைக்ரான் வைரஸின் இயல்பு என்பது, வேகமாகப் பரவும், தொற்றில் தீவிரம் இருக்கும், உடலில் கொரோனா வைரஸாலும், தடுப்பூசியாலும் ஏற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடும் என்று முதல்கட்ட ஆதாரங்கள் வாயிலாகத் தெரியவருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு காலெடுத்து வைக்கவில்லை. தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்டா வகை வைரஸை எப்படி நாம் கட்டுப்படுத்தி விட்டோமோ அதைப்போல ஒமைக்ரானையும் வீழ்த்தும் ஆயுதம் மக்கள் கையில் தான் இருக்கிறது.
தடுப்பூசி போடாதவர்கள் அதனை முதலில் செலுத்திக் கொள்ள வேண்டும். முக்ககவசம் அணிதல், மூடப்பட்ட அறையில் கூட்டமாக இருப்பதைத் தவிர்த்தல், சமூக விலகல் போன்றவற்றை அவசியம் கடைபிடிக்க வேண்டும்; கடைபிடிப்போம்.
ஒமைக்ரானை ஓடஓடத் துரத்துவோம்!



