fbpx
Homeதலையங்கம்ஒமைக்ரானை துரத்துவோம்!

ஒமைக்ரானை துரத்துவோம்!

கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. நாடு முழுவதும் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியிருக்கிறது. ஒமைக்ரான் பரவல் கட்டுப்பாடு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படவில்லை என்பது ஓர் நல்ல செய்தி.

தமிழகத்தில் பாதிப்புக்குள்ளான 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் கேரளாவில் இருந்து வந்தவர். அதனால் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுவதோடு நெகட்டிவ் முடிவு வந்தவர்களையும் சுகாதாரத்துறை தீவிரமாக கண்காணிக்கிறது.

ஆனால் மக்களின் மனநிலை என்ன? கொரோனா ஒழிய போகிறது; ஒழிந்தே விட்டது என்பதை போலக் கருதி முகக்கவசத்தை தூக்கி எறிந்து விட்டனர். சமூக இடைவெளி என்பதை எங்கேயும் காண முடியவில்லை.

இந்த சூழலில் தான் ஒமைக்ரான் என்ற இன்னொரு அரக்கன் வாய்திறந்து கோரப்பற்களுடன் வந்து இறங்கியிருக்கிறான். அதுமட்டுமா, இது பண்டிகை காலம் வேறு. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன.

விழாக் கொண்டாட்டங்களில் மகிழும் ஒவ்வொருவரும் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும். முகக்கவசமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தமிழக சுகதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒமைக்ரான் முதலில் களம் கண்ட தென் ஆப்பிரிக்காவில் தீவிர தொற்றுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தடுப்பூசி போடாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 93 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். ஒமைக்ரானில் இருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி போட முன்வரவேண்டும்.

கொரோனாவையும், அதன் திரிபு தொற்றான ஒமைக்ரானையும் வீழ்த்த நமக்கு கிடைத்திருக்கும் ஆயுதங்கள் தடுப்பூசி, முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை தான். இம்மூன்றையும் கடைப்பிடித்து ஒமைக்ரானை ஓடஒடத் துரத்துவோம்!

படிக்க வேண்டும்

spot_img