பெட்ரோல், டீசல் விலையை ரூபாய் 50க்கும் கீழ் கொண்டு வருவோம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவோம் என்றெல்லாம் மெத்த படித்த பொருளாதார மேதைகளை விட மிஞ்சிய வாக்குறுதி அளித்து விட்டு ஆட்சிக்கு வந்த ஒன்றிய அரசால் இந்த 7 ஆண்டுகளில் எந்த சாதனையும் நிகழ்த்த முடியவில்லை.
ஆனால் 100 நாட்கள் தான் ஆட்சி செய்து முடித்துள்ள தமிழக அரசை பார்த்து கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் இன்றே ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்? அதுவும் பெட்ரோல் விலை ரூ.3 குறைத்த பிறகும், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்று கூப்பாடு போடுகின்றனர்.
அத்தனையும் குறைக்கும் அதிகாரம் உங்கள் கையில் இருக்கும்போது மக்கள் சுமையை தமிழக அரசை போல மனிதாபிமான உணர்வுடன் நடந்து குறைப்பதை விடுத்து எரிகிற தீயில் கூடுதலாக எண்ணெய் ஊற்றுவது போல் ரூ.750.50 ஆக இருந்த ஒரு சமையல் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.25 அதிகரித்து ரூ.875.50 ஆக உயர்த்தியது சரிதானா? இதற்கு உங்கள் பதில் என்ன? ஏழை, எளிய, அப்பாவி நடுத்தர மக்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா? அப்படி இருந்தால் ஏன் ஒரே ஆண்டில் இத்தனை முறை பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் கேஸ் விலையை உயர்த்தி இருக்கப்போகிறீர்கள்?



