fbpx
Homeதலையங்கம்இந்திய ஒலிம்பிக் வீரர்களே, வீராங்கனைகளே! பதக்கங்களை வென்று வருக!

இந்திய ஒலிம்பிக் வீரர்களே, வீராங்கனைகளே! பதக்கங்களை வென்று வருக!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கி யது. இந்த ஒலிம்பிக்கிற்காக இந்தியா 68 வீரர்கள், 52 வீராங்கனைகள் என 120 போட்டியாளர்களை அனுப்பி உள்ளது.


கடந்த 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை 28 பதக்கங்களையே அதில் வென்றுள்ளது. அதிலும் தங்கப் பதக்கம் என்றால், கடந்த 2008ல் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா வென்றது மட்டும்தான்.


இந்த ஒலிம்பிக்கில் தனது பதக்கங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முனைப்பு காட்டுகிறது இந்திய அணி. துப்பாக்கி சுடுதலில் களம் காணும் மானு பாக்கர், இளவேனில் வாலறிவன், திவ்யான் சிங் பன்வர், ஐஸ்வர்ய பிரதாப் சிங் தோமர் ஆகியோர் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் தவிர பளுதூக்குதலில் சாய்கோம், மீராபாய் சானு, வில் வித்தையில் தீபிகா குமாரி – அதானு தாஸ் தம்பதி, குத்துச்சண்டையில் மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்டோர், மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, பாட்மிண்டனில் பி.வி. சிந்து, டென்னிஸில் சானியா மிர்ஸா ஆகியோரும் பதக்க வாய்ப்புகளை ஒரு கை பார்க்க உள்ளனர்.

தடகள பிரிவில் 18 பேர் தடம் பதிக்கும் முனைப்பில் இருக்கின்றனர். மேலும், இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணியும் பதக்க வேட்கையுடன் களம் காண உள்ளன. இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக வாள்வீச்சில் தமிழக வீராங்கனை பவானி தேவியும், குதிரையேற்றத்தில் பௌவாத் மிர்ஸா ஆகியோரும் ஈடுபடுகின்றனர்.


இந்திய வீரர்கள் வீராங்கனைகள் ஒவ்வொருவரும் பதக்க வேட்டையில் இறங்கியுள்ளனர். நேற்றைய தொடக்க விழா அணிவகுப்பின்போது நமது போட்டியாளர்களை பார்த்ததும் எழுந்து நின்று பிரதமர் மோடி கைதட்டி உற்சாகப்படுத்தியுள்ளார். இந்தியாவின் வெற்றியை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமா, நாட்டின் முதல் குடிமகன்(குடியரசு தலைவர்) முதல் அனைத்து மக்களும் வெற்றி செய்திக்காக காத்திருக்கிறார்கள்; பிரார்த்திக்கிறார்கள்.


இந்திய வீரர்களே! வீராங்கனைகளே! ஒலிம்பிக் பதக்கங்களை வென்று வருக!
உலக அரங்கில் புதிய சாதனைகள் பதிவாகட்டும்.

படிக்க வேண்டும்

spot_img