இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை நியமன உறுப்பினராக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு இந்தப்பெருமை கிடைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மகிழ்வைத் தருகிறது.
தனது இசையால் அனைத்து தமிழர்களையும் கட்டிப் போட்டவர் இளையராஜா. 1447 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். சிம்பொனி இசை அமைத்த ஒரே இந்திய கலைஞரும் அவர் தான்.
இசைச் சாதனைகளுக்காக பத்மவிபூஷன், பத்மபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகள் அவரைத் தேடி வந்து பெருமைப்படுத்தின. சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதை பலமுறை வென்றிருக்கிறார்.
தற்போது மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்து அவரை ஒன்றிய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. இது அவருக்குக் கிடைத்த கவுரவம் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு… தமிழ் இசைக்குக் கிடைத்த கவுரவம் ஆகும். அவரைப்பற்றி சிலர் விமர்சிப்பது ஏற்கத்தக்கதல்ல.
அதேபோல கேரளாவைச் சேர்ந்த தங்க மங்கை பி.டி.உஷா, கர்நாடக சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே, ஆந்திராவைச் சேர்ந்த வீரேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அத்தனை பேருமே தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இதனை, பாஜகவின் கவனம் தென் மாநிலங்களின் மீது திரும்பி உள்ளதாக அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. கட்சியை வலுப்படுத்தும் பாஜகவின் ஒரு யுக்தியா? எது எப்படியோ, இதில் அரசியல் மறைந்திருந்தாலும் தென்னிந்திய பிரபலங்களை ஒன்றிய அரசு பெருமைப்படுத்தி இருப்பது வரவேற்கத் தக்கதே.
இதில் அரசியலும் தேவையில்லை; விமர்சனங்களுக்கும் அவசியமில்லை.
ஏனெனில் இளையராஜா உள்ளிட்ட நால்வரும் எம்பியாவதற்கு உரிய தகுதி படைத்தவர்கள். அவர்களை ஒன்றிய அரசு கவுரவப்படுத்தியது சாலச் சிறந்தது.
ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்து, நால்வரையும் வாழ்த்துவோம்!



