பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீதான உடனடி நடவடிக்கை என்பது பெரும்பாலும் இடமாறுதலாகத்தான் இருக்கிறது. அடுத்த சில மாதங்களிலேயே இடமாறுதல் நடவடிக்கையும் முடிவுக்கு வந்துவிடுகிறது.
இதுபோன்ற விசாரணையில் உள்ளவர்களின் இடமாறுதல் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட ஒரு வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வானது பத்திரப்பதிவுத் துறையில் நடக்கும் தவறுகளைக் களைய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியிலும் கூட கடந்த ஆண்டு பத்திர எழுத்தர்களும், நிலத்தரகர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பத்திர எழுத்தர்கள் அதற்கான ரசீது அளிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
துறையின் தலைமை அதிகாரிகள் இத்தகைய சீர்திருத் தங்களை செய்ய முயற்சித்தாலும் அவை உரிய பலன்களை அளிப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை.
ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதெல்லாம் பெரும்பாலும் அப்போது ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியை குற்றம்சாட்டுவதே வழக்கமாக இருக்கிறது. ஊழலுக்கு துணையாகவும், வழிகாட்டிகளாகவும் இருக்கும் அதிகாரிகள் தங்களை கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள்.
பத்திரப்பதிவுத்துறை மட்டுமல்ல வணிகவரித்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் மீதும் இதே விமர்சனங்கள் எதிர் நிற்கின்றன. மாநில அரசுக்கு வருவாய் அளிக்கக்கூடிய இத்துறைகளில் நடக்கும் தவறுகள் அரசின் நிர்வாகத்தை கடுமையாக பாதிக்கக்கூடியவை.
பெருந் தொற்றின் பாதிப்பால் அரசின் வருவாய் இனங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில் அவற்றில் நிலவி வரும் இத்தகைய தவறுகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.



