அதிமுகவில் தலைமை பதவியைப் பிடிப்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடைந்தது.
நிர்வாகிகள் பெரும்பான்மையோர் எடப்பாடி பழனிச்சாமியின் பக்கமும், தொண்டர்கள் பெரும்பான்மையானோர் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக, சின்னம் ஆகியவற்றுக்கு இருவரும் போட்டி போடுகின்றனர். இரு தரப்பினரும் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளனர்.
அதேநேரம், நீதிமன்றத்தில் நடந்த சட்டப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே அதிக வெற்றி கிடைத்துள்ளது. ஆனாலும் ஓபிஎஸ் விடுவதாக இல்லை. உச்சக்கட்டப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடியை தனியாக சந்தித்துப் பேச முயன்றதாகவும், அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
அதன்பின், புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச முயன்றார். ஆனால், அவருக்கும் நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
அதேபோல, 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அகமதாபாத் சென்ற பிரதமரை வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையம் சென்றிருந்தார். விமான நிலையத்தில் பிரதமரை சந்தித்தபோது, ‘உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது’ என அவர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டு இருக்கிறார்.
டெல்லியில் தங்களை பிரதமர் சந்திக்காத நிலையில், சென்னை வருகையின்போது அவரை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக சந்தித்து பேசக்கூடும் என செய்திகள் வெளியாகின.
ஆனால், அதுபோன்ற தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நடக்கவில்லை. கடந்த 2017-ல் இதேபோன்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டபோது, பிரதமர் மோடி தலையிட்டு அவர்களை இணைத்து வைத்தார்.
அதேபோல, இப்போதும் இரு அணிகளையும் சேர்த்து வைக்க பிரதமர் முயற்சிப்பார் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், இருவரையும் பிரதமர் சந்திக்காமல் தனது கட்சித் தலைவர்க ளுடன் வெகுநேரம் ஆலோசித்து உள்ளார்.
அதிமுகவை புறந்தள்ளி, தமிழகத்தில் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பாஜக செயல்பட வேண்டும் என்று அப்போது மோடி அறி வுறுத்தி உள்ளார்.
இது, அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி நிலை என்னவாகும்?



