fbpx
Homeதலையங்கம்வங்கிகள் தனியார்மயம் மத்தியஅரசு கைவிடுமா?

வங்கிகள் தனியார்மயம் மத்தியஅரசு கைவிடுமா?

இந்திய தேசம் முழுவதும் உள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இன்று 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏன்?

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது இரண்டு பொதுத்துறை வங்கிகளை மட்டும் தனியார்மயமாக்குவோம் என்ற அறிவிப்பினை நிதியமைச்சர் வெளியிட்டார்.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தற்போது உள்ள அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்கும் கீழே குறைத்து, அதாவது அவைகளின் பெரும்பான்மை பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு முன்மொழிந்துள்ளது.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் தொழில், விவசாயம், வர்த்தகம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உட்பட இந்தியாவின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கான லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான கருவி களாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் இன்று பாஜக அரசு இந்த நோக்கங்களை சீர்குலைக்கும் நோக்குடன் வங்கிகள் அனைத்தையும் மீண்டும் தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. இது ஏற்றுக்கொள்ள இயலாதது; கண்டிக்கத்தக்கது.

மொத்த வாடிக்கையாளர்களில் 94 சதவீதம் பேர் பொதுத் துறை வங்கிகளைத்தான் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கம் செய்வதே சரி என்று மல்லுகட்டுகிறது, மத்திய அரசு.

பொதுத் துறை வங்கிகள் நிறையக் கடன்களைக் கொடுத்து தேசிய இழப்பை ஏற்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் மத்திய பாஜக அரசின் வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இந்த சட்டத் திருத்தங்களைக் கடுமையாக எதிர்க்கும் வங்கி ஊழியர் சங்கங்கள், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. அனைத்து வங்கித்துறை அமைப்புகளின் சார்பாக இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு, அது முழு வெற்றி அடைந்திருப்பது பாஜக அரசிற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை.

இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஓட்டெடுப்பு நடத்தவா முடியும்? மக்கள் கருத்துக்களை கேட்டறியலாம். ஏனெனில் பொதுத்துறை வங்கிகள் மீது மக்களாகிய வாடிக்கையாளர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். தனியார்மயத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

மத்திய அரசின் முடிவு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் என்பதே அறுதிப்பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். அது தான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது. அது நடக்குமா…?. நடந்தால் நல்லது!

படிக்க வேண்டும்

spot_img